காணியற்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிகளை வழங்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தர்மபால செனவிரட்ன தலைமையில் இன்று நடைபெற்றது.

இதன்போது வவுனியா மாவட்டத்தில் காணியற்ற மக்களுக்கு பிரதேச செயலங்கள் ஊடாக காணிக் கச்சேரி நடத்தி காணிகள் வழங்குவதாக ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவில் 1400 பேரும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 2427 பேரும், வவுனியா வடக்கில் 316 பேரும் காணி கோரி விண்ணப்பித்துள்ளதாக பிரதேச செயலாளர்களால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. வனவளத் திணைக்களத்தின் அனுமதி முழுமையாக கிடைக்காமையால் குறித்த காணிகளை மக்களுக்கு கையளிக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது குறித்த காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு வனவளத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டதுடன், குறித்த காணியின் விபரங்களை தருமாறும் அதனை கொழும்பில் அமைச்சின் அனுமதி பெற்றுத் தருவதாகவும் வன்னிப் பாராளுமன்ற உறுபர்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார். இந்நிலையில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஒருங்கிணைக்குழுவில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.