காணிகளை விட்டு வெளியேறுமாறு 62 காணி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்திய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தேவிபுரம் (அ), தேவிபுரம் (ஆ) ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், கோம்பாவில் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திம்பிலி என்ற பகுதியிலும் உள்ள காணிகளிலிருந்து, காணிகளுக்குரிய மக்களை வெளியேறுமாறு வலியுறுத்தி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தால் பல காணிகளுக்கு முன்பாக அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்கள் குடியிருக்கின்ற காணிகள் மற்றும் மக்களால் உப உணவுப் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் காணிகள் உட்பட 62 பேருடைய காணிகளுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தால் இந்த அறிவித்தல்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு அப்பகுதி மக்களால் தெரியப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ரவிகரன் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் கள நிலைமை தொடர்பில் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பிரதேச செயலகத்தால் குறிப்பிடப்பட்ட சிக்கலுக்குரிய காணிகளையும் ரவிகரன் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்.

மேலும், இப்பிரச்சினை தொடர்பாக மக்களிடமிருந்து எழுத்துமூலமான கோரிக்கைக் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ரவிகரன், இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படும் எனவும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார்.