இந்திய இலங்கை உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதன் நோக்கம் வடகிழக்கு தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடை முறைக்கு கொண்டுவருவதற்காகவே. அது 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் இது 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆந் திகதியிடப்பட்டது.
இதற்காக தேர்தல் முதல் முறையாக 1988 ஏப்ரல் 04ல் இணைந்த வடகிழக்கில் நடைபெற்றது. 2006,அக்டோபர் 16 ல் இணைந்த வடகிழக்கை ஜே.வி.கட்சி தற்போதைய திசைகாட்டி கட்சி நீதி மன்றத்தை நாடி சட்டரீதியாக பிரித்தது. பிரிந்த கிழக்கு மாகாணத்திற்காக தேர்தல் 2008 மே10 ல் நடைபெற்றது.
அதன்பின்னர் கிழக்கு மாகாணம், சப்ரக முவ மாகாணம் வட மத்திய மாகாணம், மத்திய மாகாணம் ஆகிய தேர்தல்கள் 2012 செப்டம்பர் 08லும் வட மாகாணம்,வடமேற்கு மாகாணம் மேற்கு மாகாணத்திற்காக தேர்தல்2013, செப்டம்பர் 21லும் , தென் மாகாணம் தேர்தல் 2014 மார்ச் 29லும் ஊவாமாகாண தேர்தல் 2014 செப்டம்பர் 20லும் நடைபெற்றது.
கடந்த 11 வருடங்களாக இலங்கையில் எந்த மாகாணசபை தேர்தல்களும் நடைபெறவில்லை. 08 வருடங்களாக இலங்கையில் மாகாணசபை தேர்தல் இல்லாத நிலை இழுபறி தொடர்கிறது.இதுவும் ஒரு ஜனநாயக விரோதமான செயலாக பார்க்கப்படுகிறது.
தமிழ்த்தேசிய கட்சிகளை பொறுத்தவரை 2021 மார்ச் 13 ல் முன்பிருந்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தமிழர் தரப்பிலுள்ள பல்வேறு கட்சிகளின் பிரதிகளையும் யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதில் கூட்டமைப்பு சார்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளு மன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்ம லிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன், என்.சிறிகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய சகல தமிழ்தேசிய கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டு அதிகாரப்பகிர்வு மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் வலியுறுத்தினர்.
இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேக்கு இலங்கையை விட்டு சென்ற பின்னர் இலங் கைக்கான புதிய இந்திய தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்ற சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு 2024,ஐனவரி, 22 ல் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடைபெற்றது.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சிறீதரன், சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம், சாணக்கியன் , சார்ள்ஸ் நிர்மலநாதன், விநோ நோகராதலிங்கம், மற்றும் மாவை சேனாதி ராஜா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழர் பகுதியில் தொடரும் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு, மாகாண சபை தேர்தல் நடத்தப் படாமை, அதிகாரம் பகிரப்படாமை, போன்ற விட யங்கள் குறித்து பேசினர்.
2024 நவம்பர் 14 ல் பாராளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு சரியாக ஏழு தினங்களில் ஓட்டம் ஓட்டமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரும் முதல் தரிசனமாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்தது தான் அந்த சந்திப்பு (21/11/2024) வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் நடைபெற்றது. அதில் பாரளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், ஶ்ரீநேசன், ஶ்ரீநாத், சாணாக்கியன், கோடீஷ்வரன், குகதாசன், ரவிகரன், சத்தியலிங்கம் ஆகியோர் இந்தியதூதுவரை சந்தித்து அரசியல் தீர்வு விடயங் களையும், மாகாணசபை தேர்தலை உடனே நடத்து வதற்கு இலங்கை அரசை அழுத்தம் கொடுக் குமாறும் கேட்டனர்.
2025 ஏப்ரல் 05 ல் இலங்கைக்கு வருகைதந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் தேசிய கட்சி பிரமுகர்களான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன்,சாணக்கியன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்று அதிலும் மாகாணசபை தேர்தல் விடயமும் பேசினர்.
2025 யூன் 06ல் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஸ் அவர்களை அவரது வீட்டில் தனியாக தமிழரசுகட்சி பதில் செயலாளர் சுமந்திரன் சந்தித்து பல்வேறு விடயங்களில் மாகாணசபை தேர்தல் குறித்தும் உரையாடினார்.
இப்படியான சந்திப்புக்களை நடத்துவதும் ஊடகங்களில் படம்காட்டுவதும் தமிழ்தேசிய கட்சி பிரமுகர்கள் இந்திய அரசுடன் நட்புடன் இருப்பதை மட்டும் காட்டியதே அன்றி அவர்கள் கூறிய விடயங்களை இந்தியா இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கவில்லை. இதுவரை இந்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றே உள்ளது. 13உம் இல்லை மாகாணசபை தேர்தலும் இல்லை.
இதேவேளை அண்மையில் 2025 செப்டம் பர் 18ல் இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற தமிழ் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது இந்திய தூதுவர் ஒரு குண்டை தூக்கிப்போட்டுள்ளார். “தமிழ் அரசியல் கட்சி களுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந் தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்”. என இந்தி யத் தூதுவர் சந்தோஷ் ஜா தமிழ் தரப்பின்மீதே குற்றம் கூறியுள்ளார்.
மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த மாகாண சபை தேவையில்லையென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான நிலையில் இவ் விடயத்தில் இந்தியாவினால் ஒருமித்த நிலைப்பாட்டை முன் னெடுத்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள் ளார்.
தமிழ்தேசிய கட்சிகள் மீது பழியைப்போட்டு தப்பிக்கவே இந்தியா முயற்சிப்பதை அவருடைய கருத்தில் இருந்து அறியக்கூடியதாய் உள்ளது.
தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லாத போதிலும் இந்தியா மாகாண சபை தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் தூதுவர் தெரிவித்திருந்தார்.
இலங்கை அரசுடன் எதைப்பேசியும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் இந்தியாவால் கிடைக்கவில்லை.
ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் விசேடமாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியற்கட்சிகளுக்கிடையில் இதுவிடயத்தில் ஒருமித்த கருத்துப்பாடு இல்லை. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாகாண சபை தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு உறுதியான நிலைப்பாட்டை அறியத்தந்தால், இந்தியா பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக் கும் என்றும் இந்திய தூதூவர் குறிப்பிட்டார்.
ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் இந்திய தூதுவர் கூறிய விடயங்களை உற்று நோக்கினால் மாகாணசபை தேர்தல் நடை பெறா மைக்கான காரணம் தமிழ்கட்சிகளின் ஒற்று மையீனமே என இலகுவாக பழியைப் போட்டு தப்பிக் கும் கருத்தாக இதனை நோக்கினாலும் 1987ல் இந்திய அரசால் முன்மொழியப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தம் மாகாணசபை முறைமையை மாகாணசபை தேர்தலை 2025 லும் அவர்களால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் தட்டிக் கழித்து நொண்டிச்சாட்டுகளை கூறுவ தையே காண முடிகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையிலேயே இந்த 13வது திருத்தம் அமைக் கப்பட்டுள்ளது.ஆனால் அது ஏனைய ஏழு மாகாணசபைகளுக்குமாக மொத்தம் 09, மாகா ணசபைகளும் அதிகாரப்பகிர்வை பெற்றதால் வடகிழக்கு மாகாணசபைக்கான அதிகாரப் பகிர்வு காணி பொலிஷ் அதிகாரங்கள் தொடர் பான தேவை ஏனைய மாகாணசபைகள் எதிர்பார்க்க வில்லை என்பதே உண்மை.
வடகிழக்கை பொறுத்தவரை மாகாணசபை முறைமையில் போதிய அதிகாரங்கள் இல்லை எனினும் அது ஒரு அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளி என்பதால் அதனை நிராகரிக்க முடியாத நிலை தமிழ்த்தரப்புக்கு உண்டு என்பதால் மாகா ணசபை தேர்தலையும் நிராகரிக்க முடியாது.
இந்தியா இழைத்த தவறு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வடகிழக்கிற்கு மட்டும் நடைமுறை படுத்த இலங்கை அரசை வலி யுறுத்தியிருக்கவேண்டும் வடகிழக்கிற்கு அப்பால் இலங்கை முழுவதும் 09, மாகாணசபைக்கும் இதனை நடைமுறை படுத்தவிட்டது வட கிழக் கின் தனித்துவமும் இல்லாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமே.
2009 மே 18 க்கு முந்திய நிலை வேறு 2009 மே18 க்கு பிந்திய நிலை வேறு தற்போது 16 வருடங் கள் கடந்துள்ளது தமிழ்த்தேசிய கட்சிகளும் தலைவர்களும் அதிகரித்துள்ளனர் ஒருமித்த முடிவு எடுக்க முடியாது திண்டாடும் நிலையே இப்போது காணலாம். சமகாலத்தின் இலங்கை அரசியலை கவனத்தில் எடுத்து அதிகாரப்பரவலுக்காக ஒத்த கருத்துக்கு ஈழத்தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்பதே உண்மை.