கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன் என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக போராட்டடொன்றினை முன்னெடுத்துள்ள கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்துள்ளார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டீமன் ஆனந்த மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் குறிப்பாக வடக்கில் பல இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.
கடத்தல்கள் படுகொலைகள் ஈடுபட்டவர்கள் தொடர்பில் என்னிடம் பல ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களை ஜெனிவாவிலும் சமர்ப்பிக்க உள்ளேன்.
எதிர்கால இளைய சமுதாயத்திற்கு கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களின் உண்மைத்தன்மை தெரியப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகள், சில காலங்களில் இறந்து விடுவார்கள்.
ஆனால் எதிர்கால சந்ததியினருக்கு எவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டார்கள், எதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ற உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும்
அத்தோடு தற்போது படுகொலைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் நாடாளுமன்றத்திலும் மாகாண சபை உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு நீதி வேண்டும். எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த போராட்டத்தில் ஈடுபடவில்லை.
இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் உண்மை விடயம் தொடர்பில் சரியான தெளிவுபடுத்தல் வேண்டும் என்பதற்காகவே நான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் இந்த போராட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான போராட்டம் என நினைக்காதீர்கள்.
இதேவேளை படுகொலை புரிந்தவர்களின் ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதனை ஜனாதிபதியிடம் தெரிவிப்பதற்கு சந்திப்பை ஏற்படுத்தி தருமாறு கோரியிருந்த போதிலும் இன்றுவரை எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. எனவே அதனை நான் எதிர்பார்க்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.



