கல்விக் கோட்பாடுகளுக்கான தேடலும் தேச நலனும்:
கல்வித்துறைக்கான அடிப்படைக் கட்டுமானங்கள், தேசிய மறுமலர்ச்சிக்கான அடிப்படைச் சித்தாந்தங்களை உருவாக்கிக் கொண்டிருந்த ஃபின்லாந்தினர், தங்களுக்கான தனித்துவமான கல்வித்திட்டங்கள் தொடர்பான தேடல்களிலும் இறங்கினர். ஃபின்லாந்தின் தொடக்கக் கல்வியின் தந்தை (பிதாமகர்) என்றழைக்கபடும், யூனோ சைக்னெயெஸ் (Uno Cygnaeus) – 1863 முதல் 1869 வரை தலைமைக் கல்வித்துறை ஆணையராக இருந்தபொழுது, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி, சுவசர்லாந்து, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்குப் பயணித்து, தொடக்கக் கல்வி மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் குறித்த ஆய்வுகள் செய்துவந்தார். ஜெர்மானி அறிஞர்களான ஏர்பர்ட் (Herbert), சில்லர் (Ziller) மற்றும் சுவிசர்லாந்து அறிஞரான பெசுடாலோசியன் (Pestalozzian) வரையறுத்தக் கல்வியியல் கோட்பாடுகளின் கூட்டு வடிவத்தினையும் ஆய்வு செய்து வகுப்பறைகளுக்கான செயற்பாடுகளுக்கும், ஃபின்லாந்து கல்வியின் தொடக்கநிலை வகுப்புகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி வகுப்புகளுக்கு பரிந்துரைத்தார்.
யூனோ சைக்னெயெஸ் (Uno Cygnaeus), தொடக்கநிலைக் கல்விக்கான செயற்திட்டத்தை, சுவிசர்லாந்தைச் சார்ந்த பெசுடோலோசியன் அவர்களின் கல்வியியல் கோட்பாடான Pestalozzian pedagogyயை முன்னிறுத்தி வரையறுத்தார். பெசுடோலோசியனின் கோட்பாட்டினை ஆங் கிலத்தில், investing in the individual for the development of society என்று விளங்கிக்கொள்ளலாம். அதாவது, சமூக வளர்ச்சிக்கான தனிமனிதர்களின் மேம்பாட்டினை வடிவமைப்பதே கல்வி என்று பொருள் கொள்ளலாம்.
பெசுடாலோசியன் கல்வியியல் கோட் பாட்டிற்கான அடிப்படையாக விளங்கியது ஜூயன் ரெளசீயே அவர்களின் சுதந்திரச் சிந்தனைக் கோட்பாடுகள்தான். சுவிசர்லாந்தின் ஜெனீவாவில் பிறந்தவரான, ரெளசீயேவின் கல்வியியல் கோட்பாடு தனித்தச் சிந்தனையுடைய குழந்தைகளின் வெளிப்படுத்தும் திறன் வளர்ப்பில் கவனம் செல்லுத்துவதற்கான அடிப்படையைக் கொண்டிருந்தன.
பெசுடாலோசியன், “குழந்தைகளின் தனித்தச் சிந்தனைகளை உள்ளடக்கிய அதேவேளை, குழந்தைகளுக்கே உரிய அழகுணர்ச்சிகளின் கலவையில் உருவாகும் மென்திறனை வளர்த் தெடுப்பதிலும், அதனோடு இணைந்த வன்திறன் செய்முறைப் பயிற்சிகளும் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியாக திகழவேண்டும்” என வரையறுத்திருந்தார்.
மேலும், “வார்த்தைகள், எழுத்துக்கள், வரை படங்களைக் காட்டிலும், செய்முறைக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொரு குழந்தைகளின் தனித்தத் திறன் பாதிக்காத வகையில் வகுப்பறைக் கற்றல் கூட்டுச் செயற்பாடுகளாக மாற வேண்டும்” என்றும் எடுத்துரைத்திருந்தார். “குழந்தைகள் தங்களுக்கான கேள்விகளை அவர்களே திட்டமிட்டு, பதில்களை அவர்களே தேடும்விதமாக வகுப்பறைப் பயிற்சிகள் இடம்பெற வேண்டும், மாறாக, முன்பே தயாரிக்கப்பட்டக் கேள்விகள் அதற்கான பதில்களைச் சொல்லும் கருவிகள் போல குழந்தைகள் இருக்கக்கூடாது” என்றும் பெசுடாலோசியன் எடுத்தியம்பினார்.
சமூகக் கூட்டு உளவியலை பிரதிபலிக்கும் சமூகநீதியின் அங்கமாக வகுப்பறைகளும் பள்ளிச் சூழலும் விளங்க வேண்டும் என்று 1801லேயே, How Gertrude Teaches Her Children என்ற நூலில் விளக்கப்படுத்தியும் இருந்தார் பெசுடாலோசியன். உளவியல் அறிந்துக் கற்றுக்கொடுக்கும் சூழலை உருவாக்குவது ஆசிரியர்களின் அடிப்படைத் தேவை என்றும் வரையறுத்திருந்தார்.
ஜூயன் ரெளசீயே கல்வியியல் கோட் பாட்டிற்கும் பெசுடாலோசியன் கல்வியியல் கோட்பாட்டிற்கும் மிக முக்கியமான வேறுபாடு இங்குதான் உள்ளது. குறிப்பாக, “தனிமனித சுதந்திரத்தையும் மேம்பாட்டினையும் உருவாக்கும் அதேவேளை, சமூகப் பொறுப்புணர்வினை வெளிப் படுத்தும் சிறந்தக் குடிமக்கள் உருவாக்குவதையும் சேர்த்துப் பிணைப்பதே கல்வி” என்பது பெசுடாலோசியன் கோட்பாடு. அதனை மிக வலுவாக உணர்ந்திருந்தாலும், நடைமுறைச் செயற்பாடுகளுக்கான வரையறை வழங்குவதில் ஜீயன் ரெளசீயே வெற்றிப்பெறவில்லை என ஸ்மித் மார்க் என்பவர் “Johann Heinrich Pestalozzi: pedagogy, education and social justice, The encyclopedia of pedagogy and informal education” என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கப்படுத்தியிருக்கிறார்.
பெசுடாலோசியன் முதன்மைப்படுத்தியப் புள்ளிகளே ஃபின்லாந்தின் தொடக்கக் கல்விக்கான அடிப்படை விதிகளாக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியிலும் வலுவாக இடம்பெற்றது.
ஏர்பர்டினிய-சில்லர் (Herbart-Zillerism) ஃபின்னீஷ் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அடிப்படையை ஏர்பர்டினிய-சில்லர் (Herbart-Ziller) கோட்பாடுகள் அதனை ஒட்டிப் பின்னப்பட்ட கல்வியியல் சீர்த்திருத்தங்கள் தீர்மானித்தன.
ஏர்பர்டினியக் கோட்பாடு, “பாடத்திட்டங் கள் வடிவமைப்பு ஆசிரியர்களே ஒவ்வொரு வகுப்பறைகளிலும் உருவாக்க வேண்டும், மாணவ, மாணவிகளின் கூட்டு உளவியலையும் தனித்த உளவியல்களையும் கணக்கில் கொண்ட வகுப்பறைச் செயற்பாடுகள் ஆர்வம் தூண்டும் விதமாகவும் எல்லோரையும் ஈர்த்து, கூட்டாகப் பங்களிப்புச் செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று வரையறுத்தது.
இதனோடு 1860இல் ஜெர்மன் நாட்டின் இன்னொரு கல்வியியல் கோட்பாட்டாளரான சில்லர், ஏர்படினியக் கோட்பாட்டையும் இணைத்து இன்னொரு வடிவத்தினை அளித்திருந் தார், “அதில், குடிமகன்களின் சமூகப் பங்களிப்பு, கிருத்துவப் பண்பாட்டைப் பேணிக்காக்கும் விதமாகவும் இருத்தல் வேண்டும்” என வகுத்திருந்தார். (இவைகளில் பலவற்றை 1940இல் கைவிட்டுவிட்டு, புதிய மாற்றங்களை நோக்கி நகர்ந்தனர், அடுத்தடுத்தப் பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது).
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், ஃபின்லாந்தின் தேசியக் கட்டுமானத்தையும் சமூகநலக் கோட்ப்பாட்டியையும் தொடக்கக் கல்வியிலும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் இணைத்தனர்.
மிக முக்கியமாக, “வகுப்பறை ஆசிரியர் களே நாட்டின் பொறுப்புள்ளக் குடிமகன்(ள்)கான நடைமுறை எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்”, என்பதும் “நாட்டின் பண்பாட்டு வரலாறுகளை அடுத்தத் தலைமுறைகள் அறிந்து நற்சிந்தனைக் குடிமகனாக உருவாகி வருவதற்கான அடிப்படையை விதைப்பதே ஆசிரியர்களின் கடமை” என்பதும் ஃபின்லாந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் அடிப்படைப் பாடமானது.
ஃபின்லாந்து ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள்:
சமத்துவக் கல்வி, பரவலாக்கம் அடைந்த கல்வி மையங்கள், தனித்திறன் வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கும் தொடக்கக் கல்விப் போலவே, ஃபின்லாந்தின் கல்வித்துறை வளர்ச்சி
யில் பெருந்தாக்கம் செலுத்தியவை, ஆசிரியர் பயிற்சிகள். சிறந்ததொரு ஆசிரியர் பயிற்சி வகுப்புகளால் உருவாக்கப்படும் தரமான ஆசிரியர்களாலேயே தலைச்சிறந்தக் கல்வியை வழங்கமுடியும் என்பது ஃபின்லாந்தின் திடமானக் கோட்பாடுகளில் ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது.
ஃபின்லாந்து கல்வித்துறைச் சார்ந்த பல்வேறு ஆய்வுகள் இருப்பினும், அதனை அப்படியே ஏனைய நாடுகள் பின்பற்ற முடியா தவைக்கான முதன்மைக் காரணம், ஃபின்லாந்தின் பயிற்சிக் கல்லூரிகள் வழியே உருவாக்கப்படும் பன்மைத்திறன் கொண்ட, தேசியக் கட்டு மானத்தையும் நற்சமூகக் கட்டுமானத்தையும் உருவாக்கும் பொறுப்புணர்வுக் கொண்ட, தொடர் கற்றலுக்கு உட்படும் ஆசிரியர்கள் தான் என்று பல்வேறு கல்வியியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதேப்போன்று ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் 1863-1922 ஆண்டுகளுக்கிடையேயானக் காலக்கட்டத்தில் ஃபின்லாந்தின் பரவலான அனைத்துப் பகுதிகளில் இருந்து அனைவரும் கல்விக் கற்க வசதியாக பல்வேறு ஊர்களில் கல்வியியல் கல்லூரிகள் அமைத்தார்கள்.
அருகமைப் பள்ளிகள் எப்படி எல்லா குழந்தைகளுக்கும் எட்டும் தூரத்தில் கட்டும் பொழுது, பல தரப்பட்டக் குழந்தை களுக்கும் கல்விச் சென்று சேர்வதில் வெற்றிப் பெற்றனவோ, அப்படி, பரவலாக பல்வேறு ஊர்களில் கல்வியியல் கல்லூரிகள் அமைந்தபொழுது ஃபின்லாந்தின் பெரும்பாலோருக்கும் பயிற்சிக் கல்லூரியில் சேர்வதற்குரிய வாய்ப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக, பல்வேறு மகளிர் கல்வியியல் கல்லூரிகளும் உருவாக்கப்பட்டப் பின், ஃபின் லாந்தின் ஆண்-பெண் சமத்துவ மேம்பாடும் இதனால் வளர்ந்தது.
19ஆம் நூற்றாண்டின் மையக் காலக்கட்டத் தில் தான், ஆண்களுக்கு மட்டுமே என்றிருந்த கல்வி பெண்களுக்கும் கிட்டுகின்றது. இக்காலக் கட்டத்தில் பல ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உருவாகின. தேசியக் கல்வி ஆணையம் உருவானது.