கருப்பு ஜூலை இனவழிப்பு இடம்பெற்று 42 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலை யில் இன்று வரை பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த இன அழிப்பு இலங்கையின் வரலாற்றில் அழியாத ஒரு கறையை விட்டுச் சென்றிருக்கிறது. இந்த இருண்ட அத்தியாயம் இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களை எடுத்துக் காட்டுவதுடன் நீண்ட உள்நாட்டுப் போரில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தையும் வகித்தது. இந்த வன்முறைக்கான விதைகள் நீண்ட காலத்துக்கு முன்னரேயே விதைக்கப்பட்டிருந்தன. 1956, 1958, 1961, 1964, 1974, 1977 மற்றும் 1981 ஆகிய வருடங்களையும் உள்ளடக்கிய விதத்தில் 1983 வரையில் தமிழர்களுக்கெதிரான பகைமையுணர் ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டிருந்தது.
அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கீழான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் வடக்கிலும், கிழக்கிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியையும் ஒடுக்குவதற்கு முயற்சித்தது. இந்தக் கொடூர உத்தியின் விளைவாக சுமார் 200,000 மக்கள் உயிரிழந்தார்கள். வன்முறைச் சம்பவங்களின் விளைவாக பல்லாயிரக்கணக்கான இலங்கையர் கள் இடம்பெயர்ந்ததுடன், அவர்கள் தமது சொந்த நாட்டிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக மாறினார்கள். இந்தச் சம்பவங்களின் பின்னர் பெருந்தொகையான குடும்பத் தலைவிகள், பெற்றோரை இழந்தோர் மற்றும் உடல் ரீதியான, உள ரீதியான காயங்களைக் கொண்ட தனிநபர்கள் பெரும் எண்ணிக்கையில் எஞ்சியிருந்தார்கள்.
சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தை ஏனைய குடிமக்கள் மீது பிரயோகிக்கும் நோக்கத்துடனேயே இவை அனைத்தும் முன் னெடுக்கப்பட்டன. இப்பொழுது 42 வருடங்கள் கழிந்திருக்கும் நிலையிலும் கூட, மாறி மாறி ஆட்சிக்கு வந்த பல்வேறு அரசாங்கங்கள் இந்த வன்முறையைத் தூண்டிய தேசிய பிரச்சினையின் மூல காரணங்களை கவனத்திற்கு கொள்ளத் தவறியுள்ளன.
மறக்கப்பட்ட மலையக மக்கள்
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை இனவழிப்பு இலங்கை முழுவதும் வாழ்ந்த தமிழ் மக்களின் மனதில் நீங்காது இடம்பிடித்த வடுவாக மாறியுள்ளது. எனினும் இந்த திட்டமிடப்பட்ட இனவழிப்பில் மலையக மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பது தொடர்பில் இன்றுவரை அதிக படியான கவனம் செலுத்தப்படவில்லை. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் மலையக பிரதேசங்களில் நடந்த இன வன்முறைகளை மலையக மக்களின் தனித்துவ மான துயரம் சார்ந்த நீண்ட வரலாற்றின் பின்னணி யில் பார்க்க வேண்டும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தனி சிங்கள சட்டம், ஸ்ரீமாவோ பண்டார நாயக்க காலத்தில் ஏற்பட்ட பஞ்சம், ஸ்ரீமா – சாஸ்த்ரி ஒப்பந்தம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். குறித்த ஒப்பந்தத்தின் ஊடாக இங்கு வாழ்ந்த மலையக மக்களில் பாதியாளவானோர் இந்தியாவுக்கும் மீதமானவர் கள் இலங்கைக்குமென, பிரிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தத் தின் போது பதிவான சம்பவங்களில் திருமணம் முடித்து சில நாட்களின் பின்னர் மனைவி இந்தியாவுக்கும் கணவர் இலங்கைக்கும் என்று பிரித்து அனுப்பப்பட்ட பல சம்பவங்களும் உள்ளன. அது மட்டுமல்லாது 1972ஆம் ஆண்டு பஞ்சம் ஏற்பட்ட காலப்பகுதில் கூட இலங்கை யில் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்த மக்களுக்கு வாழ்வாதாரம் சொந்த நிலம் என்று காணப்பட்ட போதும் நிலமற்ற தமக்கென்று வாழ்வாதாரமற்ற மலையக மக்கள் மிகவும் ஒரு துன்பகரமான வாழ்க்கையில் தான் வாழ்ந்திருக்கின்றனர். 1972ஆம் ஆண்டு காலத்தை பற்றி மலையக பிரதேசத்தில் பேசும் போது ‘பஞ்ச காலத்தில் மரவள்ளி கிழங்கை அவித்து உண்டோம், இரண்டு ரொட்டியை பத்து பேர் பிரித்து சாப்பிட்டோம்’ என்றெல்லாம் இன்றும் கூறுவார்கள். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் மலையக மக்கள் சனத்தொகையில் அதிகமாக இருப்பதாகவும் அவர்கள் இலங்கை நாட்டிற்கு அச்சுறுத்தலாக வந்துவிடுவார்கள் என்ற ஒரு கருத்துவாதமும் பரப்பப்பட்டது.
இந்தநிலையில் 1983ஆம் ஆண்டு கலவரம் கொழும்பில் இருந்த தமிழ் மக்களை எவ்வாறு பாதித்ததோ அதேபோன்று இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மாத்தளை மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் சிங்கள மக்களின் மத்தியில் வாழ்ந்த மலையக தமிழ் மக்களையும் பாதித்தது. இந்த கலவரத்தின் போது நுவரெலிய நகரமும் எரியூட்டப்பட்டது. இதற்கு பிரதான காரணமாக அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்க இருந்தார். ‘நுவரெலியா நகரம் பிரித்தானியர்களினால் கட்டமைக்கப்பட்டது, இதில் சில பழமையான விடயங்கள் காணப்பட்டதால் அவற்றை அழித்து புதிதாக நகரை உருவாக்குவதற்கே எரித்தோம்’ என்றும் அவர் கூறியிருந்தார். 1983 ஜூலை இனவழிப்பின் போது பதுளை – லுணுகலை பகுதியில் இரண்டு பாடசாலைகள் எரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு சுதந்திரத்தின் பின் மலையக பகுதிகளில் அந்த மக்களின் இருப்பையும் கல்வியையும் அரசாங்கத்தால் கட்டவிழ்க்கப்பட்ட இனக்கல வரங்களில் 1983ஆம் ஆண்டு இனக் கலவரம் வரலாற்றில் அழிக்க முடியாத இருண்ட சம்பவமாக இருந்து வருகிறது.
கரும் புள்ளியின் தாக்கம்
ஜூலை இனவழிப்புக்கு பின்னர் மலையக மக்கள் சார்ந்த பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த இனவழிப்புக்கு பின்னர் தங்களின் இருப்பு தொடர்பான கேள்வி மலையக மக்களின் மத்தியில் எழுந்தது. இதனடிப்படையில் அரசியல் உரிமை சார்ந்த கேள்வி வலுவடைந்தது.. கருப்பு ஜூலையை கண்டித்து 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி மலையகத்தின் பிரதான அரசியல் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ‘சிறுபான்மை தமிழ் மக்கள் மீது ஏவி விடப்பட்ட இந்த வன்முறை நன்கு திட்டமிடப்பட்ட இன அழிப்புச் செயலாகும். குண்டர்களும் காடையர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும், தங்கு தடையும் இன்றி சுதந்திரமாக வீதிகளில் அலைந்து திரிந்து திட்டமிட்ட இலக்குகளை தெரிந்தெடுத்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வன்முறைகளில் ஈடுபட்டு பேரழிவு மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு படைகள் அவர்களை உற்சாகப்படுத்தியும் மேலும் அழிவுகளை ஏற்படுத்த ஒத்தாசையும் புரிந்தனர். அவ்விதம் அவர்களை செய்ய அனுமதித்து விட்டு அரசு இயந்திரமும் பாதுகாப்புப் படைகளும் வெறுமனே கை கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. எந்தவித பாதுகாப்புமற்ற அப்பாவி மக்கள் மீது படுகொலை, கற்பழிப்பு, கொள்ளை, தீ வைப்பு என்பன தங்கு தடையின்றி மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் மீது இந்த மக்களுக்கு எந்தவித நம்பிக்கையும் இல்லாமல் போய்விட்டது.’ என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பல திட்ட மிடப்பட்ட இனவழிப்புகளை எதிர்நோக்கிய மலையக சமூகத்தினர் மத்தியில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பான விழிப்பு தற்போது குறைவடைந்து செல்கிறது. உதாரணமாக ஜூலை கலவரம் குறித்து அறிந்திராத இளைஞர்களும் சிறுவர்களும் தற்போது மலையத்தில் உள்ளனர். தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்ட இனவழிப்பை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டியது மலையக மக்களின் பொறுப்பாகும். இது மீள நிகழாமையை உறுதி செய்வதற்கு வழிவகுக்கும்.



