கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் – துரைசாமி நடராஜா

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினம் பெப்ரவரி நான்காம் திகதியாகும். இத்தினத்தில் இலங்கை சுதந்திரத்தை கொண்டாடுகின்றபோதும் இலங்கையின் சிறுபான்மையினருக்கு இது எந்தளவுக்கு சாத்தியமாகியுள்ளது என்பது குறித்து சிந்திக்கத் தோன்றுகின்றது. சுதந்திரத்தின் பின்னர் சிறுபான்மையினர் பல்வேறு நெருக்கீடுகளுக்கும் உள்ளாகியுள்ள நிலையில் இதனால் இவர்களின்  இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

சிறுபான்மையினர் வரிசையில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நெருக்கீடுகள் ஒருபடி அதிகமாகவே காணப்படுகின்றன.இனவாத அரசியல் சாக்கடைக்குள் சிக்குண்டு அல்லல்படும் இம்மக்களின் அவலவாழ்க்கை சுதந்திரத்திற்குப் பின்னரும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.            Anne Sri lanka கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் - துரைசாமி நடராஜா

இலங்கை 1948 ம் ஆண்டு சுதந்திரமடைந்தது.எனினும் அந்த சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இல்லை. மனப்பாங்கு ரீதியான சுதந்திரம் ஈட்டப்படாதவரை ஒரு நாடு சுதந்திரத்தின் ஆரோக்கியமான அறுவடையினைப் பெற்றுக்கொள்ள முடியாது.இலங்கையில் சுதந்திர ஆட்சியினை பொறுப்பேற்ற அரசியல் முன்னோடிகள் பிரித்தானிய பிடியிலிருந்து விடுதலை பெற்றதாக கூறிக் கொண்டாலும் அந்த வெள்ளை எஜமானரின் கலாசாரத்தினை பெருமையோடு அணைத்துக் கொண்டதோடு கறுப்புத்தோல் போர்த்திய வெள்ளையர்களாகவும் காட்சியளித்தார்கள் என்பதே உண்மையாகும்.

இலங்கையின் சுதந்திரம் என்பது அதன் காலனித்துவ வரலாற்றை தவறான முறையில் கணக்கிட்டுக் கொண்டமையாகும்.சிங்களத்துவ உணர்வு காலனித்துவ ஆட்சிமுறையின் அடிப்படையான பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பிரித்தானிய பாராளுமன்ற முன்மாதிரியை திரிகரண சுத்தியாக உள்வாங்கிக் கொண்டது.இதனால் பின்காலனித்துவ காலத்தில் தென்னிலங்கையின் பிரதான அரசியல் போக்கு அந்த காலனித்துவ கருத்து நிலையை சுதேசிய அரசியல் கோட்பாடாக மாற்ற முனைந்தது.இதனால் இலங்கையின் பின்காலனித்துவ வரலாறு காலனித்துவ கருத்து நிலையின் அடிப்படையிலேயே கால்கோள் செய்யப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தேசிய சுதந்திரம் என்பதை இன்றுவரை இலங்கை மக்கள் பூரணமாக அனுபவிக்கவில்லை.தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அடிப்படை மனித உரிமைப் பிரச்சினைகளும், அனைத்து மக்களையும் சமமாக பிரதிநிதித்துவப்படுத்தாத அரசியல் செயற்பாடுகளும் இலங்கை இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதையே அடையாளப்படுத்துகின்றது.இந்நிலையில் 21 வது நூற்றாண்டிலாவது ஒருங்கிணைப்பு தேசியம் ஏற்படுமா? என்றும் முக்கியஸ்தர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தழும்புகள்

இலங்கையின் சுதந்திரம் சிறுபான்மையினருக்கு சாத்தியமாகாத நிலையில் அவர்கள் பல்வேறு துயரங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த அதே கெடுபிடிகள், நெருக்கீடுகள் இன்னும் முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றன.இனவாதம், ஒதுக்கல் நிலைமைகள், மாற்றாந்தாய் மனப்பான்மை என்பன விரிசல்களுக்கு வலுசேர்த்த நிலையில் இலங்கையில் இரத்த ஆறு ஓடுவதற்கும் அது உந்துசக்தியானது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இலங்கை தேசத்தின் தேகத்தில் ஆழமாக பதிந்துள்ளன.சர்வதேசம் இலங்கையின் மீது சந்தேகப் பார்வையினை செலுத்துவதற்கும் இது வாய்ப்பளித்ததோடு இலங்கையின் அபிவிருத்தியும் தடைப்பட்டது.இவையெல்லாம் சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வடுக்களாகும்.

british SL கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் - துரைசாமி நடராஜாஇதேவேளை இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் எதிர்கொண்ட சவால்களுக்கும் ஒருபோதும் குறைவில்லை.1947 இல் டொமினியன் அந்தஸ்து கிடைத்தபோது அப்போதைய பிரதம மந்திரியாக இருந்த எஸ்.டி.சேனநாயக்காவின் குறிக்கோளாக இருந்தது, இலங்கை பிரஜைகள் என்ற வட்டத்தினுள் இந்திய வம்சாவளி தமிழர்களை அகற்றுவதேயாகும்.1948 இல் இதேவிடயம் குறித்து மேலுமொரு சட்டம் இயற்றப்பட்டது.அந்த சட்டவாக்கம் இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு எதிரானது என்பது மாத்திரமல்லாமல் இலங்கைத் தமிழர்களையும் இலங்கையில் எவ்வாறு நடத்தப்பட போகின்றார்கள் என்பதற்கான ஒரு அறிவித்தல் மணியே என்று இலங்கை தமிழ் மக்களுள் சிலர் கருதியமையாலேயே 1949 இல் இலங்கை தமிழரசுக் கட்சி தோன்றியதாக அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.

1947 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளி மக்களின் ஆதிக்கநிலை ஐக்கிய தேசியக் கட்சியின் கண்களை உறுத்தியது.இந்திய வம்சாவளி சமூகம் மேலெழும்புவதனை அக்கட்சி விரும்பவில்லை. இதனால் பொறாமை கொண்ட அக்கட்சி இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை மற்றும் பிரசாவுரிமை என்பவற்றை பறித்தெடுத்து அம்மக்களை சகல துறைகளிலும் ஓரம்கட்டியது.இதன் காரணமாக அம்மக்களின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டதுடன் அரசதுறை தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது.அரசியலில் அநாதைகளாக அவர்கள் இருந்த நிலையில் அரசாங்கத்தின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

அரச உதவிகளில் அம்மக்கள் புறந்தள்ளப்பட்ட ஒரு நிலையே காணப்பட்டது.1948 ம் ஆண்டில் பறித்தெடுத்த பிரசாவுரிமையையும் வாக்குரிமையையும் 1988 ம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி மீளவும் இந்திய வம்சாவளி மக்களுக்கு பெற்றுக் கொடுத்து தனது பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டது.இதன் பின்னர் இந்திய வம்சாவளி மக்கள் படிப்படியாக தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்ளீர்க்கப்பட்டனர்.

தொடரும் வன்செயல்கள்

உள்ளூராட்சி மன்றங்கள்,மாகாண சபை, பாராளுமன்றம் என்று இந்திய வம்சாவளி மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் விரிவுபடுத்தப்பட்டது.இதன் காரணமாக அரச அபிவிருத்திகள் பிந்திய காலப்பகுதியில் இந்திய வம்சாவளி மக்கள் என்று கூறப்படும் மலையக மக்களை வந்தடையத் தொடங்கியது.என்றபோதும் இவ்வுதவிகள் பூரணத்துவம் மிக்கதாக இல்லை.

சுதந்திர இலங்கையின் பின்னர் இனவாத முன்னெடுப்புக்கள் அதிகளவில் முன்னெடுக்கப்பட்டன.’சிறுபான்மையினருக்கு அள்ளிக் கொடுக்காவிட்டாலும் கிள்ளிக் கொடுக்கவும்’ இனவாதிகள் விரும்பவில்லை.பட்டியல் அடிப்படையில் செயற்பட்ட இனவாத சிந்தனையாளர்கள் இம்மக்களை ஓரம் கட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.காலத்துக்கு காலம் இலங்கையில் வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் 1983 ம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் அனைத்துக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது.இவ்வன்செயல் நிலைமைகள் காரணமாக பல உயிர்கள் காவு கொல்லப்பட்டதோடு உடைமைகளுக்கு சேதமும் ஏற்பட்டது.தமிழ் மக்களின் பல கடைகள் தீக்கிரையாக்கப்பட்டதோடு அவர்களின் பொருட்களும் கொள்ளையிடப்பட்டன.வன்செயல்களின் தாக்கம் காரணமாக சிலர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்தனர்.இத்தகைய இடம்பெயர்வுகளும் இனவாதிகளுக்கு சாதகமாகின.

malaiyaga tamizhar கறுப்புத் தோல் போர்த்திய வெள்ளையர்கள் - துரைசாமி நடராஜாமலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.கல்வி, சுகாதாரம் ,தொழில்வாய்ப்பு,சமூக நிலைமைகள் எனப் பல்வேறு விடயங்களிலும் இம்மக்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவில்லை.பெருந்தோட்டப் பகுதிகளில் வைத்திய வசதிகள் உரியவாறு இல்லாதுள்ளன.தோட்டப்புற வைத்தியசாலைகளில் தகைமை பெற்ற எம்.பி.பி.எஸ் வைத்தியர்கள் இல்லாத நிலையில் மருத்துவ உத்தியோகத்தர்களே கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். பெருந்தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் கடந்தகாலத்தில் முன்னெடுக்கப்பட்டன.எனினும் இந்நடவடிக்கை மந்தகதியிலேயே முன்னெடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில வைத்தியசாலைகளையே அரசாங்கம்பொறுப்பேற்றுள்ளது.இன்னும் அநேகமான வைத்தியசாலைகள் பலவித வளப்பற்றாக்குறை மற்றும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலேயே இயங்கி வருகின்றன.எனவே இலங்கை சுதந்திரமடைந்த பின்னரும் கூட பெருந்தோட்ட சுகாதார மருத்துவ நடவடிக்கைகளில் ஒரு முன்னேற்றமும் இல்லை.

பொருளாதார சுதந்திரமின்மை

மலையக பாடசாலைகள் இன்னும் கல்வித் துறையில் முன்செல்ல வேண்டிய தேவை காணப்படுகின்றது.அண்மைய தகவலொன்றின்படி பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலைக்குச் செல்லாதோர் 12.2 வீதமாகுமென்று கண்டறியப்பட்டுள்ளது.இது நகரம், கிராமம் என்பவற்றைக் காட்டிலும் அதிகமாகும்.இதேவேளை ஐந்தாம் தரம் வரை படித்தோர் வீதம் பெருந்தோட்டத்துறையில் 42 ஆகும் அதேவேளை கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரத்தில் 4.09 வீதமானவர்களும், க.பொ.த.உயர்தரத்தில் 2.2 வீதமானவர்களும் சித்திபெற்றுள்ளனர்.இத்தொகையில் மேலும் அதிகரிப்பினை ஏற்படுத்த வேண்டிய தேவையுள்ளது.மலையக பாடசாலைகளில் ஆரம்பக்கல்வி விருத்தி பெற்றுள்ள அதேவேளை உயர்கல்வித்துறையில் இன்னும் அதிகளவில் முன்னேற்றம் காணவேண்டியுள்ளது.எனவே இதற்கான திட்டங்களை வகுத்து செயற்படுத்துதல் வேண்டும்.

மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து காணப்படுகின்றது.இதில் பல்வேறு காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன.போக்குவரத்து சீர்கேடு, வறுமை, கற்றல் ஈடுபாடின்மை, நோய்கள், விசேட தேவை நிலைமைகள் எனப்பலவும் இடைவிலகலுக்கு காரணமாக அமைந்துள்ளது.இதனிடையே இவற்றை கட்டுப்படுத்தி கல்வியில் அபிவிருத்தியை மலையகத்தில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும்.சுதந்திர இலங்கையில் மலையக சமூகம் கல்விமையச் சமூகமாக விளங்க வேண்டும்.அவ்வாறு விளங்குகின்றபோதுதான் இம்மக்களின் தேசிய நீரோட்டக் கனவு துரிதப்படுதப்படும் என்பதோடு மேலும் பல சாதக விளைவுகளுக்கும் இது வித்திடுவதாக அமையும்.

மலையக மக்கள் மாதச்சம்பளம் இல்லாத நிலையில் இன்னும் நாட்கூலிகளாக வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கின்றனர்.உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதென்பது இவர்களுக்கு கானல் நீராகவுள்ளது.இவர்களுக்கு நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதில் ஆட்சியாளர்களும் கம்பனியினரும் இழுத்தடிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் இம்மக்களின் பொருளாதார சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.மாற்றுத் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் தேயிலைத் தொழிற்றுறையையே நம்பிவாழும் இம்மக்களுக்கு நியாயமான சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.மேலும் மேலதிக வருவாயை தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் பொருட்டு தோட்டப்பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.பெருந்தோட்டப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் காணப்படுவதாக இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சுயநலவாத இருப்பு

இதுபோன்றே தொழிலாளர்கள் காணியுரிமை மற்றும் வீட்டுரிமை இல்லாதுள்ள நிலையில் இவற்றை பெற்றுக் கொடுக்க போவதாக அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது.இவ்வாக்குறுதிகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காய் ஆகியுள்ளதனை கடந்தகால வரலாறுகள் நிரூபித்து வருகின்றன.இந்நிலையில் வாக்குறுதிகள் செயல்வடிவம் பெறவேண்டும்.இதற்கான அழுத்தத்தை மலையக அரசியல்வாதிகள் அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும்.இந்நிலையில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோதும் மலையக மக்கள் பல்வேறு உரிமைகளையும்  பெற்றுக் கொள்ளாத ஒரு நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர் என்பதே கசப்பான உண்மையாகும்.இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.இந்நிலை மாற்றப்பட வேண்டும்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 76 ஆண்டுகள் ஆகியுள்ளபோதும் இதன் பயன்கள் உரியவாறு பெற்றுக் கொள்ளப்படவில்லை.நாட்டின் சுதந்திரத்துக்காக ‘இலங்கையர்’ என்ற ரீதியில் ஒன்றுபட்டு குரல் கொடுத்தவர்கள் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் தமக்குள்ளே முரண்பட்டுக் கொண்ட வரலாறுகளே காணப்படுகின்றன.இது ஒரு துர்பாக்கிய நிலை என்றுதான் கூறவேண்டும்.அரசியல்வாதிகள் தமது சுயநலவாத இருப்பினை தக்கவைத்துக்கொள்ள மக்களை பலிக்கடாவாக்கி வருகின்றனர்.இந்த கறைபடிந்த அத்தியாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தினை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அனைத்து இனங்களும் சமமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களுக்கான உரிமைகளை வழங்க ஆட்சியாளர்கள் முன்வருதல் வேண்டும்.இலங்கையின் சுதந்திரகால அரசியல் சமூகப் பின்னணியில் நாம் விளங்கிக் கொள்வது இலங்கை வர்க்க அடுக்கமைவானது ஒன்றை ஒன்று சுரண்டியும், மேலாதிக்கம் செலுத்தியும் வந்தபோது அந்த சுரண்டலை தொடர்ச்சியாக பேணவும் அரசியல் அதிகாரத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கை மக்களுக்கு இனவாத வழி காட்டப்பட்டது.

இதுவரை இருந்த அரசியல்வாதிகள் இம்மக்களுக்கு அவ்வாறானதோர் வழியையே காட்டிச் சென்றனர்.ஆனால் மக்கள் தொடர்ந்து பொருளாதார நலன்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.எனவே இலங்கை மக்களாகிய நாம் பொருளாதார சமத்துவத்தை என்று பெறுகின்றோமோ அன்றே இனவாத சர்ச்சைகளில் இருந்து மீண்டு உண்மைச் சுதந்திரத்தை பெற்றவர்களாவோம் என்று புத்திஜீவிகள் வலியுறுத்துகின்றனர்.

இலங்கை பல்லின மக்களும் வாழும் ஒரு நாடாகும்.இங்கு எந்தவொரு இனமும் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது.அவ்வாறு அடிபணிந்து நடக்கவேண்டிய அவசியமும் கிடையாது.எனவே சகல இனத்தவர்களின் உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட்ட சுதந்திர நாடாக இலங்கை மிளிர வேண்டும்.