கருணாவே வெருகல் படுகொலையின் காரண கர்த்தா : பா.அரியநேத்திரன் அறிக்கை

வெருகல் படுகொலை ஏற்பட பிரதான காரணகர்த்தா கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். வெருகல் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றதுடன் அதில் கருணாவும் கலந்துகொண்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், அந்த காலப்பகுதியில் பிரதேசவாதக் கருத்தை கருணாதரப்பினர் பரப்பியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி விடுதலைப் புலிகளில் இருந்து தாம் விலகிவிட்டதாக ஊடகத்தில் கருணா அறிவித்தார்.அதன்பின்னர் கிழக்குப் புலிகள், வன்னிப் புலிகள், என்ற பிரதேசவாதக் கருத்தை கருணா தரப்பினர் பரப்பி மட்டக்களப்பு நகர்பகுதி, செங்கலடி பகுதிகளில் இருந்த யாழ் மக்களை வெளியேற்றும் காடைத் தனத்தை புரிந்தனர்.

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் முடியும் வரை விடுதலைப் புலிகள் கருணா குழு மீது எந்த நடவடிக்கையையும் செய்யவில்லை.  பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி இரவு முதல் மறுநாள்வரை வாகரைக்கும், வெருகல் பாலத்துக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கருணா தரப்பை சேர்ந்த போராளிகள் சிலர் உயிரிழந்தனர். பின்னர் அவ்வாறு உயிரிழந்த தரப்பினரையும் மாவீரர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தலைவர் பிரபாகரன் தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அனைவரும் இன விடுதலைக்காக போராடியவர்கள் என்றும் சிலரின் தவறான வழிகாட்டுதலுக்கு இலக்காகியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உயிர் நீத்த அத்தனை போராளிகளும் தலைவரின் கட்டளைப்படி மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டு கார்த்திகை 27ஆம் திகதி அவர்களுக்காகவுமே தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்படுகிறது என்பதே உண்மை. “வெருகல் படுகொலை” என வேறுபடுகொலை தினம் உண்டு.
திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை 1986ஆம் ஆண்டு யூன் மாதம் 12ஆம் திகதி எடுத்து சென்ற போது மகிந்தபுர பகுதியில் வைத்து மூன்று அரச அதிகாரிகள் உட்பட 21 பேர் இராணுவம் மற்றும் ஆயுததாரிகளினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அந்த படுகொலையையே “வெருகல் படுகொலை” என நினைவு கூருவது குறிப்பிடத்தக்கதாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.