கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி : இலங்கை இராஜதந்திர எதிர்ப்பு

கனடாவின் பிரம்டனில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுதூபி கட்டுமானத்துக்கு இராஜதந்திர எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆதாரமற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் மற்றும் அதனை அடிப்படையாக கொண்ட நினைவுச்சின்னத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்புதல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தின் கடுமையான ஆட்சேபனையை மீண்டும் வலியுறுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த முன்னெடுப்புகள் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமைக்கான அரசாங்கத்தின் முயற்சிகளை சிக்கலாக்குவதுடன் அவற்றை பெரிதும் பலவீனப்படுத்துவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் குறித்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இனப்படுகொலை நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டானது, தேசிய அல்லது சர்வதேச அளவில் எந்தவொரு நம்பகமான அதிகாரியாலும் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாத ஒன்றாகும் என்று அமைச்சர் விஜித ஹேரத்தின் சந்திப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவை தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட குற்றச்சாட்டுகள் என இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்துகிறது. இந்தப்பொய்யான கதையை இலங்கை முற்றிலும் நிராகரிப்பதுடன், கனடாவிற்குள் தத்தமது தேர்தல் ஆதாயங்களுக்காக இவ்வாறு பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளதாக நம்புகிறது என்றும் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்டன் நகரசபையின் இந்த வருந்தத்தக்க முயற்சியைத் தலையிட்டுத் தடுக்குமாறு, கனடாவின் மத்திய அரசை இலங்கை அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடு குறித்த முன்னெடுப்பை, இலங்கை மற்றும் கனேடிய சமூகங்களுக்கு எதிரான ஒன்றாகவே இலங்கை அரசு கருதுகிறது. இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவதும், கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட நினைவுச்சின்னங்களை நிர்மாணிப்பதும் பொதுமக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்லாமல், அனைத்து சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் நீடித்த அமைதிக்கான இலங்கையின் முயற்சிகளைச் சீர்குலைப்பவையாக அமையுமென, இலங்கை அரசு உறுதியாக நம்புகிறது என்று வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.