கண்டறியப்படும் உண்மைகள் முழுமையானதாக இருக்க வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

செம்மணி விவகாரம் உட்பட உண்மை கண்டறியப்பட வேண்டுமாயின் அது முழுமையானதாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்துக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குழாம் ஒன்று நேற்று விஜயம் செய்திருந்தமை தொடர்பில் கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இலங்கை ரோம் சாசனத்தை அங்கீகரிக்காமையால், இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர் குற்றம் என்பன தொடர்பில் இலங்கைக்குள் விசாரணை செய்ய முடியாது.
அவ்வாறாயின் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
எனவே, இந்த உண்மையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளிப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிருஷாந்தி குமாரசுவாமி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால், அதற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களில் அழியா இடம் பிடித்திருக்கின்ற செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் ஏற்கனவே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
செம்மணி பகுதியில் சுமார் அறுநூறு உடலங்கள் வரை புதைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அவரால் வழங்கப்பட்ட வாக்குமூலம் ஒன்று காணப்படுகிறது.

இந்த நிலையில், அவரின்  மனைவியினால் ஜனாதிபதிக்கு எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் தற்போது மற்றுமொரு திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது. செம்ணியில் சுமார் 300 பேர் வரையில் புதைக்கப்பட்டதாகவும், சிறையில் உள்ள தனது கணவருக்கு அதற்கான உத்தரவுகளை பிறப்பித்த நபர்கள் தொடர்பில் சாட்சியமளிக்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டு  குறித்த கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக தாம் அறிந்துகொண்டுள்ளதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சோமரத்ன ராஜபக்ஷ ஒரு குற்றவாளியாக காணப்பட்டாலும், அவர்  சில விடயங்களை கூறப்போவதாக, அவரின் மனைவி கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். எனவே, சோமரத்ன ராஜபக்ஷ என்ன கூற போகிறார் என்பதை அறிய வேண்டும் என்றும், சிறையில் உள்ள நிலையில் அவருக்கு ஏதாவது உயிர் ஆபத்துக்கள் ஏற்படுமானால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.