கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்குப் பதில் கட்டமைப்புத் தமிழீழத் தேசிய எழுச்சியாகும். தேசியமென்பது சிதறு தேங்காயடி விளையாட்டல்ல. தேசியமென்பது ஐக்கியம், ஒருமைப்பாடு, கூட்டுச்சேரல், அணிசேரல் என்ற அணுவிலிருந்து அண்டம் வரையான ஒருமைப் பாட்டைக் குறிக்கிறது.
ஒரு மக்களினத்தை அழிப்பதற்கு முதலில் அவர்களின் பண்பாட்டையழித்தல் அத்துடன் கூடவே அவர்களின் தேசியத் தன்மையை அழித்து விடவேண்டுமென்ற உணர்வுக்குள்ளுள்ள நிலைப் பாட்டின் கீழ்த்தான் காலனி ஆதிக்கம் ஆசியா, ஆபிரிக்க நாடுகளில் தமது கொள்ளைக்கார, கொலைகார அரசியலை நடத்தியதாக விடுதலை வீரனும், சிந்தனையாளருமான அமில்கார் கப்ரால் (Amílcar Cabral) கூறினார். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஆதிக்கமானது இதனை உணர்வு பூர்வமாக பல்பரிமாணத்துடன் கையாளுகிறது.
ஆதிக்க சக்திகளுக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதம் தேசியம். அது மக்களைத் திரளாக்கி, மக்களை எதிரிக்கெதிரான பலம் பொருந்திய ஆயுதமாய் நிலைநிறுத்தி விடுகிறது. அது மக்களை, மக்களுக்கு அரணாக்குகிறது. அந்தத் தேசியத்தினடித்தளம் பண்பாடும், வாழ்க்கை முறையும், ஒருமைப்பாடும், சனநாயக முறைமையு மாகும்.
தேசியமும், தேசிய ஐக்கியமும், தேசிய ஒருமைப்பாடும் இல்லையேல் மக்களுக்கென்று பாதுகாப்பொன்றுமில்லை. ஆதலால் தேசியம் எப்போதும் முதல் நிலையில் மக்களுக்கான பாது காப்பரணும், பாதுகாப்புக் கவசமும், கூடவே எதிரிக்கெதிரான ஈட்டியுமாகும்.
தமிழ்த் தேசியத்தைச் சிதறு தேங்காயாக் கும் பணியை எதிரியின் சார்பில் தமிழ்த் தலை வர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். களத்திலும், புலத்திலுமுள்ள தமிழ் அரசியற் செயற் பாட்டாளர்க ளும், பண்பாட்டாளர்களும் இப்பிரச்சினையை உணர்வு பூர்வமாகப் புரிந்து, தமிழ்த் தேசியத்தைப் புதிய சிந்தனையுடன் கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
தேசியத்தில் மக்கள், நிலம், மொழி, பண்பாடு, வரலாறு என்பன எவ்வாறு முக்கியமான அம்சங்களோ அவ்வாறே அத்தேசியத்திற்கான கட்டமைப்பும் முக்கியமான அம்சமாகும். காணப் படும் யதார்த்த பூர்வமான களநிலைக்குப் பொருத்தமாக, உலகளாவிய உள்நாட்டு, வெளி நாட்டு அரசி யலுக்குப் பொருத்தமாகத் தேசியம் எப்பொழுதும் இடையறாது கட்டமைப்புரீதியாகப் புதுப் பிக்கப்பட்டு கொண்டேயிருக்கவேண்டும்.
தற்போது ஈழத் தமிழர்கள் மத்தியிலுள்ள துயரகரமான நிலைமையென்னவெனில் தமிழ்த் தேசியத்தைச் சிதறடிப்பதையே தேசிய அரசியலாகத்தமிழ்த் தலைவர்கள் கொண்டிருக் கிறார்கள். ஆத லால் தமிழ்த் தேசியமானது தற்போது சிதறடித்தல் என்கின்ற பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. இதனை அரசியற் கோட்பாட்டு ரீதியாகத் தேசிய நாசகாரச் செயல், அரசியல் நாச காரம் (Political Vandalism) என்றழைக்கலாம்.
இத்தகைய நாசகார அரசியலுக்குப் பதி லாக தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டரசியலை முன்னெடுக்க வேண்டியது ஒவ்வொரு ஈழத் தமிழரினதும் கடமையாகும். எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் ஒவ்வொரு சனநாயகவாதியின ரும் பொறுப்பும் , கடமையும், பணியுமாகும்.
யாரையும் திட்டிக் கொண்டிருப்பதையும், வசைபாடிக் கொண்டிருப்பதையும், இலட்சிய மாகக் கொண்டிருக்க முடியாது. திட்டுவதையும், சேற்றை வாரிவீசிக் கொண்டிருப்பதையும் தேசிய வாதமாக்கிவிடக்கூடாது. சிதறு தேங்காயடித் தலை யும், சேற்றைவாரி வீசலையும் தேசிய மாக்கி விட்ட ஒரு காலகட்டத்தில் ஈழத் தமிழர்கள் சேற்றுப் புழுக்களாய் நெழியுமொரு காலகட்டத்தில் வாழ் கிறோமென்ற துயர்தோய்ந்த இன்றைய வரலாற்றுக் கட்டத்தைப் புறந்தள்ளமுடியாது. எனவே இன் றைய நிலையிற் புதிய பரிமாணத்துடன், புதிய சிந்தனையுடன் புதிய கட்டமைப்புச் செய்ய வேண்டும்.
இதற்கு உலகளாவிய இன்றைய உடனடி யதார்த்தத்தையும், சர்வதேச அரசியலையும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசியலையும்; ஈழத் தமிழரின் உள்ளக அரசியலைத் தாயகம், புலம் பெயர் தேசமென இரு பரிமாணங்களிலும் யதார்த்தபூர்வமாகக் கணக்கிலெடுத்துச் செயற்பட வேண்டும். ஈழ மண்ணில் ஈழ நிலமும், அதன் கடல் சார்ந்த பிரதேசத்தையும் உள்ளடக்கிய சிந்தனையுடன் அகத்திலும், புலம்பெயர் தேசத்தில் ஒரு புதிய கட்டமைப்புவாதத்தையுருவாக்க வேண் டும்.
முதலாவதாக ஈழத் தமிழரின் அரசியலை அறிவியல் மயப்படுத்த வேண்டும். எழுமாத்திர அரசியலையும், தான்தோன்றித்தனமான அரசிய லையும் புறந்தள்ளி, முற்றிலும் புத்தி பூர்வமான, அறிவார்ந்த திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்துதலென்கின்ற கோசம் முதலில் முன்னெடுக்க வேண்டும். இதற்கு இரண்டு விடயங் கள் மிகவும் அடிப்படையானவை.
முதலில் தமிழரரசியலை சனநாயக மயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ்க் கட்சிகள் முதலாவதாக தம்மை சனநாயக மயப் படுத்த முயற்சிக்க வேண்டும். சனநாயக அம்சங் களையும், நடைமுறைகளையும் இவர்கள் பின் பற்ற வேண்டும். சனநாயகத்தின் கூரிய முது கெலும்பு வெற்றிக்கும், தோல்விக்கும் பொறுப் பேற்றலாகும்.
தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகலைத் தலைவர்கள் ஒரு சனநாயக நடை முறையாகக் கொள்வதன் மூலம் தகுதியான புதியவர்களின் வருகையையும், சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான பாதையையும் திறக்க லாம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமராயிருந்த திருமதி இந்திரா காந்தி குறிப்பாக 1970களின் மத்தியில் மேற்கொண்ட அவசரகாலச் சட்டத்தின் கீழான ஆட்சியில் இழைக்கப்பட்ட தவறுகளையும், அரசு மேற்கொண்ட கட்டாயக் கருச்சிதைப்பில் ஏற்பட்ட பாரதூரமான விளைவுகளையும், பெருந் தவறாகப் பொறுப்பேற்று அதற்காக 1979 டிசம்பர் பொதுத் தேர்தலில் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார். அவரை மன்னித்து 1980 ஆம் ஆண்டு சனவரியில் அவரை மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கச் செய்தனர். தமிழினத் தலைவர்களும் தங்கள் தவறுகளை ஒப்புக் கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினால் ஈழத்தமிழ் மக்கள் நிச்சயம் மன்னிப்பார்கள். திருந்தி மன்னிப்புக் கோருதலும், மக்கள் அதனை மன்னித்தலும் ஒரு சனநாயக நடைமுறைதான்.
எப்படியோ தற்போது ஈழத் தமிழ் அரசியற் களத்தில் முற்றிலும் பல்வேறு வழிகளிலும் சனநாயக மயப்படுத்தப்பட வேண்டும். இது உடனடியான, இலகுவான காரியமல்ல என்பது வெள்ளிடை மலை. ஆயினும் அதனை நோக்கி முன்னேற இப்போது அவசரமான கட்டமைப்பு களையுருவாக்க வேண்டியதவசியம்.
முதலாவதாக எத்தகைய அரசியற் தீர்மானங் களையும் அறிவார்ந்த அறிக்கைகளுக்குட்படுத்த வேண்டும். ஈழத் தமிழர்கள் மத்தியில் அரசி யற் தீர்மானங்களை ஒட்டி அறிக்கைகள் தயாரிப்பதற் கான ஒரு ஆய்வுக் குழுவை உருவாக்க வேண்டும். இவர்கள் கட்சி அரசியல்களுக்கு அப் பாற்பட்டு ஒரு விடயத்தை முற்றிலும் அறிவார்ந்த ஆய்வு களினூடாக நேர்மையுடனும், விசுவாசமாக வும் முன்வைக்க வேண்டும். ஊடகங்கள் இவற்றைப் பொறுப்புணர்வுடன் மக்கள் மத்தியிலெடுத்துச் செல்ல வேண்டும்.
நமது அரசு கொண்டுவருமொரு அரசியற் தீர்மானமென்றால் அதனை ஆய்வுக்குட்படுத்தி அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்படிச் சமூகத்தி லெழக்கூடிய அரசியல், பொருளாதாரம், மூலவளம், சாதி, மத, சமூகப் பிரச்சினைகள், இயற்கை அனர்த்தங்கள், கட்சிகளுக்கிடையே அல்லது உட் கட்சிக்குள்ளே நடக்கக்கூடிய பிரச்சினைகள், முரண்பாடுகளையும் அவ்வப்போது ஆய்வுக் குட்படுத்தி அறிக்கை தயாரிக்குமொரு மையக் குழு உருவாக்கப்பட வேண்டும். இது தமிழ் தேசியத்தைச் சரிவர இயக்குவதற்கேற்ற இருதய மான மைய விடயமாகும்.
இதில் அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் என்போரது கூட்டுப் பங்களிப்பு தலையாயது. இதனை முற்றிலும் செயற்பூர்வமான பொறிமுறை அமைப்புக்கேற்ப கட்டமைப்புச் செய்ய வேண்டும். இந்த ஆய்வறிக்கைக் குழுவு க்கு அனுசரணையாக மும்மொழி கொண்ட மொழிபெயர்ப்புக் குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும்.
இவையிரண்டுக்கும் அனுசரணையாக வொரு வெளியீட்டுக் குழு உருவாக்கப்பட வேண்டும். அந்த வெளியீட்டுக் குழுவே அச்சு வெளியீடுகளையும், ஊடகங்களைக் கையாளும் அதிகாரம் கொண்டதாகவிருக்கவேண்டும். இவை மூன்றும் தனித்தனியே சுயாதீனமானவையும் கூட்டானவையுமாகவிருக்கவேண்டும்.
இப்படியே புலம்பெயர்ந்த நாடுகளில் குறிப்பாக மேற்குலகில் மேற்குலக நாடுகளைக் கையாளவல்ல ஒரு செயற்பாட்டுக்குழு உருவாக் கப்பட வேண்டும். அது ஆய்வு செய்தல், கொள்கை வகுத்தல் போன்ற பணிகளை முதற் தரமாகச் செய்ய வேண்டும். இவற்றை நடை முறைப்படுத்துவதற் கென ஒரு தாய், தந்தை அணியை உருவாக்க வேண்டும் .
இங்கு இரண்டு இராசதந்திர அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஒன்று குறிப்பாக மேற்குலக நாடுகளையும் ஏனைய நாடுகளையும் கையாள்வது. இரண்டு இந்தியாவையும், தமிழகத் தையும் கையாள்வது.
மேற்குலக நாடுகளில் ஐரோப்பிய ஒன்றி யத்தில் 28 நாடுகளும், வட அமெரிக்காவில் இரண்டு நாடுகளுமென முப்பது நாடுகளின் தடை பட்டியலில் புலிகள் இணைக்கப்பட்டுள்ளார்கள். வெறுமனே புலிகளுக்கெதிரான தடைமட்டுமல்ல. கூடவே அது போராட்டத்திற்கெதிரான தடையும், மக்களின் தேசிய வளர்ச்சியை முன்னெடுப்பதற் கெதிரான தடையுமாகும்.
ஆசியாவில் மூன்று நாடுகளில் புலிகள் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாகும். அவை இலங்கை , இந்தியா, மலேசியா. இவற்றை வெறும் கற்பனையில் அல்லது எழுமாத்திரத்தில், அல்லது முற்கற்பிதத்தில் கையாள முடியாது. விஞ்ஞானபூர்வமான சர்வதேச அரசியல் நடுவர் களுக்கூடாகச் சாத்தியக் கூறுகளை ஒருங்கு திரட்டிக் கையாள வேண்டும். இவற்றிக்கு அரசியலறிவும் பாண்டித்தியமும் அவசியம். குரல்கள் எதிரிகளை உருவாக்குமே தவிர நண்பர்களை உருவாக்காது. அழிவைத் தருமே தவிர மாற்றத்தையோ ஆக்கத்தையோ தராது . எல்லா வற்றிற்கும் உரமூட்டக் கூடிய வகையிற் சிறப் பான தகவல் மையத்தையுருவாக்க வேண்டும். அந்தத் தகவல் மையம் அல்ஜசீரா போன்ற ஒரு நம்பகரமான, திறமையான ஊடகமாகச் சுயாதீனமாக நடத்தப்படவேண்டும். இத்தகைய உயிரோட்டமானவற்றைச் செய்யாமல் மேற்கொள் ளப்படும் எத்தகைய ஆர்ப்பரிப்புகளும், ஆரவாரங் களும் பயனற்றுப் போகும்.
தியாகங்களை உயிரோட்டத்தோடு மக்கள் மையப்படுத்தாதுவிட்டால் வெறும் கல்லறைக் கொண்டாட்டங்களாக மட்டும் வைத்திருந்தால் அவை கல்லறைக்குள் முடங்கி ஆளப் புதைந்து போய்விடும். தியாகங்களைக் கல்லறைப் பண்டங்களாகவல்லாமல் தியாகங்களுக்கு உயி ரோட்ட வேண்டுமென்றால் மக்கள் மயப்பட்ட அரசியல் உணர்வுகளினாலும், அதற்கான அரசியல் முன்னெடுப்புகளினாலுமே சாத்தியம். தியாகங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அரசியல் வெற்றிகளினாலும் முன்னெடுப்புகளினாலும் அவை உயிரூட்டப்பட வேண்டும். வெறும் கல் லறை கொண்டாட்டங்களாலல்ல.
இங்கு தியாகம் என்று சொல்வது போரா ளிகளை மட்டுமல்ல; கூடவே படுகொலைக்குள் ளான மக்களின் வாழ்விழப்பையும், அவர்களின் சந்ததியினர் படும் துயரங்களையுமாகும். மரணம் இறந்தவரோடு போய் விடலாம், ஆனால் அவரது மரணத்தைச் சுமக்கும் உயிரோடுள்ள அன்புக்கு ரிய வர்களின், உறவினர்களின் ஒரு துயரமும் பெருந்தியாகம் தான் அதாவது பொதுவாக வாழ் வில் இறந்தவரின் பொறுப்பு அவரது மரணத் தோடு முடிவடைந்து விடுகிறது. இறந்தவரின் கடமைகளையும், பணிகளையும் சுமக்க வேண் டிய பொறுப்பு அவரின் வாரிசுகளுக்குண்டு. இறந்தவர்களோடு தியாகம் முடிவடைந்து விடுவ தில்லை; அதை சுமப்பவர்க ளோடு தியாகம் நீள் கிறது. இந்நிலையிற் மிகுந்த பொறுப்புணர்வு டன் கல்லறைகளுக் குள்ளிருக்கும் தியாகிகளையும், அவர்களின் நீட்சியான மக்களின் தியாகங்களையும் ஒருங்கு சேர முன்னெடுக்கவல்ல அரசியற் சிந்தனை வேண்டும்.
குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளிற் காணப்படக்கூடிய சனநாயகச் சூழல் இவற்றை விரைவாகப் பெரிதாக முன்னெடுக்க அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கியுள்ளது.
இந்நிலையிற் தமிழ்த் தேசியச் சிதை வுக்கான கோழிச் சண்டைகளைக் கடந்து தமிழ்த் தேசியத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான கட்டமைப்பு களையுருவாக்க வேண்டும். ஈழத் தமிழர்கள் ஜே.வி.பி. யிடமிருந்து ஒரு பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டியுண்டு. அவர்கள் 1971 ஆம் ஆண்டு ஓர் ஆயுதப் போராட் டத்தை நடத்தி 14, 000 — 20, 000 இளைஞர் யுவதி களை இழந்தார்கள். பின்பு 1987 — 89 ஆம் ஆண்டுகளில் 1,00, 000 — 1,20, 000 இளைஞர் யுவதிகளை இழந்து இரண்டு ஆயுதப் போராட்டங்களிலும் படுதோல்வி யடைந்தனர்.
1971 ஆம் ஆண்டு ஜேவிபி யினர் கடல் கடந்து வடகொரியாவிருந்து கப்பல் வழியாக ஆயுதம் கடத்துவதற்கெடுத்த முயற்சி தோல்வி முடிந்தது. ஒரு தீவுக்கு ஆயுதப் போராட்டம் அதிகம் பொருத்தமுடையதல்ல என்பதை நடைமுறையில் முதற் தரமாக அவர்கள் கண்டு கொண்டாலும் இரண்டாம் தரமும் ஏற்பட்ட தோல்வியின் பின்பு அவர்கள் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வந்து ஆயுதங்களுக்குப் பதிலாக இனவாதத்தைக் கையிலெடுத்து ஆட்சியைக் கைப்பெற்றும் கலையில் வெற்றி பெற்றார்கள். சிங்கள மக்களை இனவாதத்தால் அணி திரட்டி ஆட்சியைக் கைப்பற்றுதல் என்கின்ற வித்தையை அவர்கள் புரிந்து கொண்டார்கள். மேலும் சிங்கள இனவாதத்தை முன்னெடுப்பதன் மூலம் மக்களை தெளிவாக அணி திரட்டலாமென்ற முயற்சியில் அவர்கள் முன்னணியிலுள்ளார்கள்.
கச்சதீவுக்கு எந்தவொரு சிங்கள நாடாளு மன்ற உறுப்பினரும் அரசியற் பரிமாணத்துடன் வாழ்நாளில் பயணித்தது கிடையாது. ஆனால் அண்மையில் இலங்கை சனாதிபதி கச்சதீவுக்கு. ஒரு சாகசப் பயணத்தை மேற்கொண்டு கடல் எல்லையையும், வானெல்லையும், தரை எல்லை யையும் பாதுகாக்கப் போவதாக சிங்கள இன வாதத்தின் பெயரால் குரல் எழுப்பி சிங்கள இனவாதத்தின் கதாநாயகனாய் சிங்கள மக்களின் மனங்களிலொரு தேசியக் கதாநாயகனாய் நிலை நிறுத்தப்படுகிறார் .
ஒடுக்கும் இனவாதம் அதுவும் ஈழத் தமிழரின் கச்சதீவு மண்ணில் நின்று தன்னை நுணுக்கமாகக் கட்டமைக்கிறது. ஆனால் ஒடுக் கப்படும் தமிழ் தேசிய இனம் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் நேரமெல்லாம் தம்மை சிதறு தேங்காய் அடிக்கிறது.
இத்தகைய இழிநிலையிருந்து மீண்டெழு ந்து தமிழீழத் தேசியத்தை இன்றைய புதிய சூழலுக்குப் பொருத்தமாக புதிய வகையில் கட்டி எழுப்பத் தொடங்க வேண்டும். அதற்கு உள்ளும், புறமும் புதிய கட்டமைப்புக்களை முற்றிலும் அறிவார்ந்த வகையில் வடிவமைக்க வேண்டும்.