கடற்படை அதிகாரிகள் விடுதலை ; நீதித்துறையில் தலையீடு என்கிறார் சுமந்திரன்

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன். ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளார் என்றும்  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்-

‘அரசியல் பழிவாங்கல் தொடர்பாக அராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஓர்உத்தரவிட்டுள்ளது. 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு தொடர்பான விவகாரம் இது. இந்த வழக்கு சில தினங்களின் முன் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இன்று குற்றப்பத்திரம் சமர்ப்பிக்க வேண்டாம், அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஒரு உத்தரவிடப் போகிறது என, ஆணைக்குழு என்ன உத்தரவிடப் போகின்றது என்பதைத்தெரிந்து கொண்டு சமர்ப்பணம்செய்திருந்தார்கள். 

ஆனால் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. குற்றப்பத்திரம் எதிரிகளிடம் கையளிக்கப்பட்டது. இதில் முக்கியமான எதிரி முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட. அவர் பிணையில்வெளியிலுள்ள போதும், வழக்குக்கு முன்னிலையாகவில்லை. அடுத்த வழக்கு தவணையில் அவரை முன்னிலையாகும்படி அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் ஜனாதிபதி ஆணைக்குழு வசந்த கரன்னகொட, தஹநாயக்க ஆகியோரை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது. இது மோசமான அரசியல் தலையீடு என்று தென்படுகிறது. சட்டமா அதிபர் திணைக்களம், சுயாதீனமாக இயங்குவது. வழக்கமாகச்சட்டமா அதிபர் திணைக்களம் அரசின் கைக்கூலியாக செயற்படுவதாகத்தான் இங்கு குறிப்பிடுவோம்.

ஆனால், இங்கு சட்டமாஅதிபர் திணைக்களம் முன்னெடுத்த வழக்கை, ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூலம் தடுக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம் மிகப்பெரியது. நேரடிச் சாட்சியத்துடன் அரச படையினரிடம் கையளிக்கப்பட்டதற்கு ஆயிரமாயிரம் பேர் உள்ளனர். இதில் ஒரு விடயமும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை. ஐ.நாவுக்கு கண்துடைப்பு முயற்சியாக 11 தமிழ் இளைஞர்கள் விவகாரத்தைச் சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்தது. மற்ற விடயங்கள் முன்னெடுக்கப்படாவிட்டாலும், இந்த ஒரு விடயமாவது சரியாக முன்னெடுக்கப்படுகிறதா என்பதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருந்தோம்.

கொழும்பில் இந்த இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காகக்கடத்தப்பட்டவர்கள். சிலர் சார்பில் ப்பம் கொடுக்கப்பட்டுமுள்ளது. இதன் பின்னர் இவர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் கொல்லப்பட்டனர் எனக்குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்தவேளை கடற்படைத் தளபதியாக இருந்தவர், கடற்படை புலனாய்வாளர்கள் ஆகியோர் தொடர்பில் சாட்சியங்கள் இருந்ததால், அவர்கள் மீது குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது.

இது கோட்டா பாதுகாப்புச்செயலாளராக இருந்தபோது நடந்தது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தல்முடிந்த மறுநாள்- 17ஆம் திகதி காலை – விடுவிப்பேன் என்றார். 17ஆம் திகதி யாரும் விடுவிக்கப்படாவிட்டாலும், அது இப்போது மேற்கொள்ளப்படுகிறது.

நீதித்துறையில் தலையீடு செய்யும் இந்த நடவடிக்கையை கண்டிக்கிறோம். நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களத்தில் தலையீடு செய்யப்படும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.