கடந்தகால ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் யுத்த வெற்றியை கொண்டாடுவதாக சாணக்கியன் சாடல்

‘இன அழிப்பு தொடர்பில் இந்த ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே. கடந்தகால ஆட்சியாளர்களைப் போலவே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் யுத்த வெற்றியை கொண்டாடுகின்றார்’ என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். ‘இறுதிப்போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர்’.
‘கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் நீதியை எதிர்பார்த்துள்ளனர். எனினும், இனவழிப்புக்கான நீதி என்பது மறுக்கப்பட்டுள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘தற்போதைய ஆட்சியின் கீழ் நீதி கிடைக்குமா என்பதிலும் நம்பிக்கை இல்லை’. ‘இன அழிப்புக்கான நீதி வேண்டும் என்பதில் தமிழரசுக் கட்சி உறுதியாக உள்ளது. அதற்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும்’ என்று இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

‘மே 18ஆம் திகதி எமது மக்கள் தன்னெழுச்சியாகவே நினைவேந்தலை நடத்தினர். இதில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லை. நீதி வேண்டும் என்பதில் எமது மக்கள் உறுதியாக உள்ளனர் என்பதையே இது வெளிப்படுத்துகின்றது.’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.