ஒரே நேரத்தில் இந்திய, சீன போர் கப்பல்கள் இலங்கை துறைமுகத்தில்!

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் ஒரே நேரத்தில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் வந்து தங்கி இருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தியா – சீனா இடையே தற்போது உறவு சுமூகமாக இல்லை. நில எல்லை பகுதியில் சீன இராணுவம் மோதல் போக்கை கடைப்பிடித்து வருவதாக இந்திய தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது. அதே நேரத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இலங்கை துறைமுகங்களுக்கு சீன போர்க் கப்பல்கள், உளவு கப்பல்கள் அடிக்கடி வந்து செல்வதாக இந்திய தரப்பில் தொடர் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.  இது தொடர்பில்  இலங்கை அரசிடம், இந்தியா ஏற்கெனவே தனது அதிருப்தியை தெரிவித்தது. ஆனாலும், சீன போர்க்கப்பல்கள், இலங்கை துறைமுகத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்துக்கு இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் மும்பை போர்க்கப்பல் கடந்த திங்கள் கிழமை காலை  வந்தது. அந்த கப்பலுக்கு இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதேபோல் சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்கள் ஹெஃபே, வுசிஷான், கிலன்சான் ஆகியவையும்  கொழும்பு துறைகத்துக்கு வந்தன. அவற்றுக்கும் இலங்கை கடற்படை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுமுக உறவு இல்லாத இருநாட்டு போர்க்கப்பல்களும் ஒரே துறைமுகத்தில் வந்து தங்கியதால் இது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்த சூழலில்  இந்தியா, சீன கடற்படை கப்பல்களுடன் இலங்கை கடற்படை நாளை தனித்தனியாக கூட்டுப் பயிற்சியை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.