ஒரு மாவீரவிதை ஆகிலும் தாயகமாய் துளிர்க்கும் : அ. சுரேஷ்

மாவீரர் தினம் என்பது மாவீரர் நாள் எனவும், வீரமரணம் என்பது வீரச்சாவு எனவும், தூய தமிழில் மாற்றம் செய்யப்பெற்று, உச்சரிக்கின்ற சின்னச் சின்ன கவனயீர்ப்பு தொடக்கம். இன்று சர்வதேசப் பரப்பெங்கும் பேரெழு ச்சியினையும், சர்வதேச ஈர்ப்பினையும் தொட்டு அசைத்து, தமிழர் மரபில் புதிய பண்பாட்டு நிகழ்வாக பரிணமித்து ஆண்டுதோறும் பண்பட்டுக்கொண்டே மிளிரும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள்தாயகத்திலும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களிடையேயும் இயல்பான ஆர்வத்தை கூர்தீட்டி நிற்கிறது.
தமது, தாய்மண்ணுக்காகவும், அந்த மண் ணில் வாழும் மக்களுக்காகவும் ,தனது தாய் மொழிக்காகவும், செழுமைமிக்க மொழிக்குரிய கலை பண்பாட்டினையும், தனது மண்ணின்  பொருண்மிய வளத்தினையும், நீண்டபெரும் வரலாற்றுப் பின்னணியையும் கொண்ட தனது தேசிய இனத்தின் விடுதலைக்காகவும் தன் வாழ்க்கை யினை முழுமையாக அர்ப்பணிக்கும் போது  மாவீரர்கள் உதயமாகின்றனர்.
அவர்கள் தாய்நாட்டிற்காக உயிர் ஈந்த தேசிய வீரராகப் போற்றப்படுகிறனர்.   தாயகத், தன்னாட்சி  விடுதலைக்காக நேர்மையுணர்வுடன் போராடும் ஒடுக்கப்பட்ட இனத்தின் முகமாகவும், முகவரியாகவும் அந்த மாவீரர்கள்  தம்மை நினைவுறுத்தி விடுதலையின் நம்பிக்கை அச்சாக மாறுகின்றனர்.
அவர்களது மீளும் நினைவுகளும், அளப் பரிய ஈகமும் விடுதலைக்கான பயணத்தில் உந்து சக்தியாகிறது. பேரெழுச்சியோடு மக்களை ஓரணி யில் திரட்டுகிறது , அத்தகைய திரட்சி தம்மைத் தாமே ஆளும் நம்பிக்கையினையும்,  ஆன்மீக வலுவையும் எம் இனமக்களுக்குத் தருகிறது.
எத்தனை ஆயிரம் மாவீரவிதைகளை நமது மண்ணில் விதைத்தோம் அதில் ஒன்றேனும் தாயக மாய் முளைவிடும்.  இந்நாளில் நமது மக்கள் ஒன்று திரண்டும், திரண்டு நின்று விளக்கேற்றி வணங்குவதும்,  சர்வதேச அரசியலில் பலமான மோதுகையை மீண்டும் மீண்டும் ஏற்படுத்துவதாக அமையும்.
ஈழத்தமிழரின் தன்னாட்சி அரசியல் விடுதலை என்பது தவிர்க்க முடியாத ஒரு பேசுபொருளாக தக்கவைக்க எமது மக்கள் வெளிப்படுத்தும் மாவீர்நாள் எழுச்சி என்பது நியாயபூர்வமான தவமாகும்.
இத்தகைய சர்வதேச சட்ட ஏற்பாட்டு ஜனநாயக போராட்டத் தவம் என்பது  சர்வதேச அழுத்த சக்திகளின் சிந்தனைகளில் முட்களை விதைத்துவிட்டது போல, கண்ணுக்குப் புலப்ப டாத சீண்டலைக்   கொடுத்துக்கொண்டே இருக்கும்.
தமிழீழ மக்களின் அரசியல் வேணவா என்பது, தார்மீக அறமும், உண்மையும் கொண்டது.
அதற்கு அத்தகைய வல்லமை உண்டு. இத்தகைய ஆன்மீக நிறைவும், பெருந்தன்மையும் எம்மை பெருமை கொள்ளவைக்கிறது.
எமது தாயக தன்னாட்சி உரிமைக்கான தீர்மானம், அதிமுக்கியமான பேச்சு மேசைகளுக்கு பரிசீலனைக்காக தன்னியல்பிலேயே எழுந்து வரும் ஒளியின் தன்மை பொருந்தியது. மாயையான, நவீன அறிவியலுக்கும் பொருந்தாத சிறிலங்கா அரசின்  ஒற்றையாட்சி அரசியல், சட்ட நடைமுறைகள், அரசியல் சீர்திருத் தங்கள் யாவும் தமிழின அழிப்பு நடவடிக்கையினை கட்டவிழ்த்து விடுவதற்காகவே என்ற நடைமுறை உண்மை கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிரூபிக் கப்பட்ட ஒன்று.
பிராந்திய, சர்வதேச நாடுகள் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவலமான அரசியல். ஈழத் தமிழரின் இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றிய உரையாடல் சிறிலங்காவில் சாத்தியமில்லை என்பதே ஏற்றுக்கொண்ட அரசியல் படிப்பினை இது.
சர்வதேச உறவுகளில்  அவரவருடைய அரசியற் பொருளாதர நலன்களில், மின்னல் இடைவெட்டுப் போன்ற அதிர்ச்சியை தரவல்ல தாக எமது மக்களின் இடையறாத போராட்ட நம்பிக்கை ஏற்படுத்தும்.
மாற்றமுடியாத வரலாற்று விதியாக, வரலாற்று நிர்ப்பந்தமாக புதிய தேசம் உருவாகும். தமிழீழ தேசம் சாத்தியமாகும்.  நவீன வரலாற்றில், சர்வதேச அரசியலில், பிரிந்துசென்று தாம் விரும்பிய ஆட்சியை நிர்ணயிக்கும் நடைமுறைகள் எதுவும் ஊற்றுவாய் அடைத்து போனதில்லை.
அதற்கான மிகப்பிரகாசமான வாய்ப்புகள் வாசல்களை திறந்தே வைத்திருக்கின்றன. இவை எமது நம்பிக்கையினைப் பலப்படுத்துகின்றன. எனவே,  27 நவம்பர், 2025 ம் ஆண்டு  தமிழீழ தேசிய மாவீரர் நாளின் பேரெழுச்சியானது அத்தகைய நம்பிக்கையினை ஏற்படுத்திக்காட்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பாகும்.