ஒக்ரோபா் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தோ்தல் நடக்கும் – அமைச்சா் ஹரின் பொ்னான்டோ அறிவிப்பு

“ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும்” என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் கூட்டணிகளை அமைக்கும் பணிகளில் பிரதான மற்றும் சிறியக் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை நடத்திவரும் பின்புலத்தில், தேர்தல் ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி நடைபெறும் என அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களில் ஒருவரான ஹரின் பெர்ணான்டோ கூறியுள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார். அதனை அவரே அறிவிப்பார். ஒக்டோபர் 14ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 3% வாக்குகளை பெற்றவர்கள் அதற்கு மேலதிகமாக 47% வாக்குகளை பெற்றுக்கொள்வது என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

நாட்டை கட்டியெழுப்ப தற்போதைய ஜனாதிபதிக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். அவர் குறுகிய காலத்தில் வங்குரோத்து நிலையில் இருந்த நாட்டை மாற்றியுள்ளார்” எனவும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.