ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் முதன்மை நாடாகத் திகழும் அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்துமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரின்போது பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு பிரேரணை கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொண்டுவரப்படும் புதிய பிரேரணையுடன் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடும் கரிசனை நிலவுவதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச செயற்திட்டங்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்பட்டு வரும் நிதியளிப்பை நிறுத்துவதற்கு அந்நாடு உத்தேசித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளே இக்கரிசனைக்கான பிரதான காரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி அளித்துவரும் நாடுகளில் அமெரிக்கா முதன்மை நாடாகத் திகழ்வதாகவும், அமெரிக்கா அதன் நிதியளிப்பை நிறுத்தும் பட்சத்தில் அது இலங்கை உள்ளிட்ட நாடுகள் தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டங்களில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் நிறைவேற்றப்படினும், அதனைத்தொடர்ந்து அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான போதியளவு நிதி ஐ.நாவின் வரவு, செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்படாவிடின், அதுவும் எமக்குப் பாதகமானதாகவே அமையும் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவான வகையில் புதிய தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கே முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.