ஐ.நா.வில் புதிய வரைவு யாருக்கு வெற்றி  – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் 60ஆவது அமர்வு நடைபெற்று வருகையில், பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும் தலைப்பில், இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் வரைவு (A/u;RC/60/L.1) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரைவானது, 2027 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறும் 66ஆவது அமர்விலேயே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதால் அதுவரை  இலங்கைக்கு காலஅவகாசத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகின்றது.
அதற்கிடையில், பேரவையின் 61ஆவது மற்றும் 64ஆவது அமர்வுகளில் வாய்மொழி அறிக்கைகளையும், 63ஆவது அமர்வில் எழுத்து மூல அறிக்கையும், 66ஆவது அமர்வில் இறுதி அறிக்கையையும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ் தானிகர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்று இந்த வரைவு கால அட்டவணையை குறிப் பிட்டுள்ளது.
கடந்த கால தீர்மானங்களின் தொடர்ச்சி யாக, கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த வரைவு பொதுப்படையில் ‘ஆகக்குறைந்த மென்மை யான உள்ளடக்கப் பெறுமானங்களைக் கொண்டிருக் கின்றபோதும்’ பெரும் விவாதங்களுக்கு உள்ளாகி யுள்ளது.
குறித்த வரைவு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்குமாறு கோருகின்ற நிலையில் ஆணை வழங்கும் காலப்பகுதி எவ்வாறாக இருப்பினும் முதலில் குறித்த வரைவை மையப்படுத்திய தீர்மானம் நிறைவேற்றப்படுமா என்பதில் நிச்சய மற்ற நிலைமை காணப்படுகிறது.
ஏனெனில், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதி அநுரகுமார தலைமையி லான புதிய அரசாங்கம் ‘உள்நாட்டுப் பொறி முறைகள்’ மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம், பொறுப்புக்கூறல் செய்யப்படலாம் என்று உறுதி யளித்துள்ளதால், பல நாடுகள் அந்த வாக்குறுதியை நம்புவதற்குக் தயாராக இருக்கின்றன. இது இலங்கை மீதான புதிய தீர்மானத்திற்கு ஆதரவு திரட்டுவதில் சவாலான நிலைமையை தோற்று வித்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் மொத்தம் 47உறுப்பு நாடுகள் வாக்களிக்க தகுதி பெற்றவையாக உள்ளன. அவற்றில், 13 நாடுகள் வரை மட்டுமே இலங்கைக்கு நேரடியாக ஆதர வளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை ஆசிய-பசுபிக், ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளாக இருக்கலாம் என்பதும் எதிர் பார்ப்புத்தான்.
பல நாடுகள், தாங்கள் எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்ற அச்சத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கின்றன. இது தீர்மானத்தை நிறைவேற்ற விரும்பும் நாடுகளுக்கு பெரும் தடையாக உள்ளது.
பிரேரணையைக் கொண்டுவருவதற்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் தலைமையாளரான பிரித்தானியாவும் கனடாவும் கூட அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்க்கின்றன. ஆனால், அமெரிக்கா தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கவில்லை.
இது இணை அனுசரணை நாடுகளின் இராஜதந்திர பலத்தை வெகுவாகக் குறைக்கிறது. இருப்பினும், பிரித்தானியா தம்மால் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானமாக நிறைவேற்றப் படும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றது. கள நிலைமையைப் பார்க்கையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை இலங்கை குறித்த புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்குப் போதிய வாக்குகளைப் பெறுவது கடினமானதாக உள்ளது.
பல நாடுகள் தத்தமது உள்நாட்டுப் பிரச்சி னைகளில் சர்வதேசத் தலையீட்டை விரும் பாததால், இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக் கின்றன. இதனால், குறைந்தபட்சம் ஒரு பிரேர ணையை நிறைவேற்றுவதற்காக, அதன் உள்ளடக் கத்தை நீர்த்துப் போகச் செய்ய வேண்டிய துரதிஷ் டமான நிலைமை தோன்றியுள்ளது.
எவ்வாறாயினும், தீர்மானம் பலவீனமான தாக இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவது மிக முக்கியம். ஏனெனில், இதுவே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் இலங் கையின் மனித உரிமை நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஆவணப் படுத்து வதற்கும் தீர்மான நிறைவேற்றம் அவசியமானதாகும்.
அவ்வாறில்லாத பட்சத்தில், 2012ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மீது தொடர்ந்து வரும் கண்காணிப்பு நிறுத்தப்படும், அது இலங்கை யின் பொறுப்புக்கூறல் முயற்சிகளுக்கு பெரும் பின்னடைவாக அமையும். அதேநேரம், இலங்கை யில் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயம் சர்வதேச அரங்கிலிருந்தே அகற்றப்பட்டுவிடும் பேராபத்தும் உள்ளது.
அடுத்தபடியாக, புதிய வரைவின் உள்ளட கத்தைப் பார்க்கின்றபோது, பாதிக்கப்பட்ட மக் களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள், கடந்த தசாப் தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க சர்வதேச சுயாதீன நீதிமன்றப் பொறிமுறை நிறுவப்பட வேண்டும் என்றே நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
அத்தகைய பொறிமுறையில், சர்வதேச வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளடங்குவர். பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கை இல்லாத நிலைமையே உள்ளது.
இலங்கையின் நீதித்துறை மற்றும் சட்ட அமுலாக்கல் துறைகள் வெகுவாக ஆட்சியில் உள்ள மற்றும் எதிரணியில் உள்ள அரசியல் தரப்புக்களின் ‘அரசியல் தாக்கங்களுக்கு’ உட்பட் டவை, அவை நீதியை நிலைநாட்டத் தவறியுள்ளன. தற்போதும் தவறியே வருகின்றன என்பது பாதிக்கப்பட்ட தரப்பினர் வெளிப்படையாக உறுதிப்படுத்தக்கூடிய நிலைப்பாடாகும்.
ஆனால், புதிய வரைவானது, இலங்கையி னுள் ஒரு பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையை நிறுவுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரு கிறது. அதாவது சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலக மொன்றை ஸ்தாபிக்கும் இலங்கை அரசாங்கத்தின் முன்மொழிவை ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றது.
ஆகவே புதிய வரைவில் வலியுறுத்தப் பட்டுள்ள பொறிமுறை, பெரும்பாலும் உள்நாட்டு நீதித்துறை வழிமுறைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நிலைமையானது, கடந்த காலங்களில் இலங்கை தொடர்பில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் அதியுச்சமாகக் காணப்பட்ட ‘சர்வதேச கலப்பு நீதிமன்றம்’ என்ற கோரிக்கையிலிருந்து குறிப்பிடத்தக்க பின் வாங்கலாகும். அதுமட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை கோரிக்கையிலிருந்தான சர்வதேசத்தின் பாரியதொரு விலகலாகும்.
போரின் பின்னரான இலங்கையின் எந்த அரசாங்கமும் சர்வதேச தலையீட்டை தொடர்ச்சி யாகவும் கடுமையாகவும் எதிர்த்தே வந்திருக் கின்றன. இலங்கையின் இறையாண் மைக்கு உட் பட்டதொரு உள்நாட்டுப் பொறிமுறையே பொறுப் புக்கூறலுக்கு உகந்தது என்பதிலும் உறுதியாகவே இருந்துள்ளன. இலங்கையின் இந்த நிலைப்பாட்டிற்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் தாராளமான ஆதரவு இலங்கைக்கு உள்ளது. இந்த நாடுகள், உள் விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளை எதிர்ப்பதால், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தீர்மானங்களுக்கு எதிராக நிற்கின்றன. குறித்த நாடுகளின் மேற்குல எதிர்ப்பும், இலங்கைக்கான ஆதரவும் சர்வதேச சமூகத்தை ‘இராஜதந்திர நெருக்கடிக்குள்’ தள்ளியிருக்கின்றன.
குறிப்பாக, இம்முறை ஐ.நா.மனித உரி மைகள் பேரவையின் அமர்வில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைத் தாண்டி, எரித் திரியா, லாவோஸ் ஆகிய நாடுகளும் பகிரங்கமாக இலங்கைக்கான ஆதரவினை வெளிப்படுத்துவதில் மும்முரமாக இருக்கின்றன.  இதனைவிடவும் தமக்கு ஆதரவாக, பஹ்ரைன், குவைத், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எதியோப்பியா, ஐவரிகோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ், தாய்லாந்து, வனூட்டு, தென்கொரியா, எரித்ரியா, ஈரான், நேபாளம், இந்தியா, சிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுவேலா, மாலைதீவுகள், கியூபா, தென்சூடான், சூடான், ரஷ்யா மற்றும் புரூண்டி உள்ளிட்ட 33நாடுகள் இருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான நிலைமை தோன்றியுள்ளமை யால் தான் இணை அனுசரணை நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், ஒரு முழுமையான சர்வதேசப் பொறிமுறையை வலியுறுத்துவதை விட, இலங்கையுடன் ஒத்துழைத்து, ஒரு உள்நாட்டுப் பொறிமுறையை நிறுவுமாறு கோருவது, நடை முறைக்கு உகந்ததாக இருக்கும் என்று கருதி யிருக்கிறது.
உண்மையில் ஜெனிவாவில் நடைபெற்று வரும் 60ஆவது அமர்வு இலங்கைக்கும், பாதிக் கப்பட்ட மக்களுக்கும், சர்வதேச சமூகத்திற்கும் முக்கியமான தருணம். ஒவ்வொரு தரப்பும் தமது பிடிமானங்களை தக்கவைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதொரு நிலைமை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களின் பக் கத்திலிருந்து அதற்கான போதுமான முனைப் புக்கள் முன்னெடுக்கப்படவில்லை. லொபி யிங்கிலும் பாரிய பின்னடைவுகளே காணப் படுகின்றன.
அரசியல் கட்சிகள், சிவில் சமூகங் கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், புலம் பெயர் அமைப்புக்கள் ஆகியவற்றுக்குள் காணப்படு கின்ற ‘அக முரண்பாடுகள்’ இந்த மிக மோசமான நிலைமையை தோற்றுவித்துள்ளன என்பதை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக குரல் கொடுப் பதற்கு வரையறைகள் உள்ளன. ‘நாடுகளுக்கும் நாடுகளுக்குமான உறவு’ ‘அரசுக்கும், அரசுக்குமான இருதரப்பு உறவு’ போன்ற பல்வேறு காரணங்கள் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளன.
இவற்றையெல்லாம், பயன்படுத்தி, இலங் கையின் புதிய ஆட்சியாளர்கள், சர்வதேசத்தின் தலையீட்டை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதுடன் உள்ளகப் பொறிமுறையை சர்வதேச சமூகத்தால் ஏற்கவும் செய்துள்ளமையானது அவர்களின் வெற்றியே.