ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் முன்வைத்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணை வரைவு தொடர்பில் ஏற்கனவே கடந்த வாரம் ஆராய்ந்திருந்தோம்.
குறித்த வரைவு, ‘உள்ளகப்பொறிமு றையை’ ஏற்றுக்கொள்ளும் வகையில் மிகத் தெளி வான உள்ளடக்கத்தை கொண்டிருந்ததையும் சுட்டிக்காட்டியிருந்தோம். இத்தகைய பின்னணியில் தற்போது அந்த வரைவை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள், தமிழ் மக்களின் நீண்டகால நீதிக் கோரிக்கைகள் மற்றும் அரசியல் அபிலாசைகள் ஆகியவற்றை சர்வதேச அரங்கில் முழுமையாக நீர்த்துப் போகச் செய்துள்ளன.
முதலாவது வரைவில் இருந்த பல முக்கிய அம்சங்கள் நீக்கப்பட்டிருப்பதானது, இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு சர்வதேச சமூகம் அடிபணிந்ததா என்ற கேள்வியை எழுப்புவதுடன், ‘ஜெனிவா’ பொறிமுறையின் நம்பகத்தன்மை குறித்தும் தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
குறித்த திருத்தப் பிரேரணையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த எந்தவொரு திடமான உத்தர வாதமோ, நீதிக்கான பொறிமுறையோ இல்லை. அது வெறுமனே பெயரளவிலான கடதாசி ஆவ ணமாகவே காணப்படுகின்றது. இதனை நிறை வேற்றுவதாலே அல்லது நிறைவேற்றுவதாலோ விடுவதாலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த வொரு பலனும் இல்லை.
விசேடமாக இதுகால வரையிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் சம்பந்தமாக பொறுப்புக்கூறல் செய் வதற்கான எந்த அதிகாரமும் இல்லை என்பது வெளிப்படையானது.
இருப்பினும், இலங்கை சம்பந்தமான பிரேரணைகளால் ‘பொறுப்புக்கூறல் விவகாரம் சர்வதேச அரங்கில் உயிர்ப்புடன் இருக்கும்’ என்ற ஆகக்குறைந்த நம்பிக்கையாவது இருந்தது. ஆனால் இப்போது அந்த நம்பிக்கையும் தகர்க்கப் பட்டுள்ளது.
இணை அனுசரணை நாடுகளின் திருத்தப் பட்ட வரைவின் மிக ஆபத்தான அம்சம், இலங்கையில் ஏழு தசாப்தங்களாக நிலவும் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையை மூடி மறைக் கும் வகையில் செய்யப்பட்டிருக்கும் சொற்பத மாற்றம் தான். அதாவது, முதலாவது வரைவில், ‘பல தசாப்தகாலமாகத் தொடர்ந்த இனவாத மற்றும் பிரிவினைவாத அரசியல் நடவடிக்கைகளினாலும், இனப்பிரச்சினையினாலும் மிகையான பாதிப்புக்க ளும், துன்பங்களும் ஏற்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய திருத்தத்தின் மூலம் ‘இனப் பிரச்சினை’ என்ற சொல் முற்றாக நீக்கப் பட்டு, வெறுமனே ‘மோதல்’ என்ற வார்த்தை பிரதி யிடப் பட்டுள்ளது. இது ஆச்சரியமானது. ‘ஐ.நா.வில் வேலை செய்கின்றோம்’ என்று கூறும் உள்நாட்டு, புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாடுகள் விளைவு இதுவா என்ற கேள்வியையும் ஒருங்கே எழுப்புகின்றது.
இலங்கையில் நடந்தது வெறுமனே இரண்டு தரப்பினருக்கிடையேயான ஒரு ‘மோதல்’ அல்ல. இனரீதியான திட்டமிட்டு கட்டமைக் கப்பட்ட அழிப்புக்களும், ஆக்கிரமிப்புக்களுமா கும். அரசாங்கத்தின் பாகுபாடுகள் மற்றும் அரச இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகள் ஆகியவற்றின் விளைவாக எழுந்தவொரு தேசிய இனப் பிரச்சினையாகும்.
இப்பிரச்சினையின் மூல காரணிகளை தொடர்ச்சியாக ஆட்சியிலிருக்கின்ற அரசாங்கங் கள் மறுதலித்து வரும் நிலையில், சர்வதேச ஆவணத்தில் இருந்தும் இந்தப் பதத்தை நீக்கு வதானது, இலங்கையின் ‘பௌத்த மையவாத சிங்கள தேசியவாத’ அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகும். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களது நீதிக்கோரிக்கைளையும் கூடவே நியாயமான, நிரந் தரமான அரசியல் தீர்வைக் காண்பதற்கு சர்வதேச அழுத்தம் வெகுவாக இருக்க வேண்டும் என்றே பாரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், சர்வதேச அரங்கொன்றில் தீர்மா னமாக நிறைவேற்றப்படவுள்ள பிரேரணையில் தேசிய இனப்பிரச்சினை என்பது நீக்கப்படுகின்றது என்றால் அது அதற்குப் பின்னர் உள்நாட்டில் காணப்படும் ஆட்சியாளர்கள் பிரச்சினைகளின் ஆழமான வேர்களை ஒப்புக்கொள்ள மறுக்கும் சூழலில் தீர்வு எவ்வாறு கிடைக்கும்?
இதேபோன்று தான், கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப் புக்கூறுதலை உறுதிசெய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுறையை பாதிக்கப்பட்ட மக்கள் வலி யுறுத்தி வருகின்றார்கள். ஆனால் அந்த வலியுறுத்தல்களை எல்லாம் பொருட்டாக கொள்ளப்படாது வரைவில் ஆரம்பத் தில் உள்நாட்டு பொறிமுறையை அங்கீகரிக்கும் வகையில் ‘சர்வதேச மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சுயாதீன சிறப்பு வழக்குத்தொடுநர் பங்கேற் புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறை யொன்றை நிறுவுவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும்’ என்று வலியுறுத் தப்பட்டிருந்தது.
இந்த வலியுறுத்தலானது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கோரிக்கையை முழுமையாகநிரா கரிப்பதாக இருந்த நிலையிலும், ஆகக் குறைந்தது நீதிப்பொறிமுறை பற்றிய உரையாடலாவது நீடிக்கின்றது என்றவொரு நிலைமை காணப் பட்டது. ஆனால், தற்போது உள்ளகப்பொறி முறையாக முன்மொழியப்பட்ட அப்பகுதி நீக்கப் பட்டுள்ளது.
இதன்மூலம், போர்க்கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான திடமான சர்வதேச நடவடிக்கைகளுக்கு எள்ளளவிலான வாய்ப்புக்களும் இல்லையென்பது உறுதியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது, ஐ.நா.வை நோக்கிய நீதிக்கான தமிழ் மக்களின் நீண்ட காலப் போராட்டத்தை முழுமையாக பலவீனப் படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாது, இதற்குமேல் ஐ.நாவை நோக்கிய செயற்பாடுகளும், எதிர்பார்ப் புக்களும் வீணானது என்ற கருத்துருவாக்கம் மேலெழுந்துள்ளது.
அதேநேரம், பிரேரணையின் முதலாவது வரைவில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு வழிகோலிய காரணிகளில் ஒன்றாக ‘இராணுவ மயமாக்கம்’ என்ற சொல் சுட்டிக்காட்டப்பட்டிருந் தது. ஆனால், திருத்தப்பட்ட வரைவில் இந்தச் சொல் நீக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நிலவும் அதிகப்படியான இராணுவப் பிரசன்னம், நில அபகரிப்பு மற்றும் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கு இந்தப் பதம் மிக முக்கியமானதாக இருக்கின்றது. ஆனால் அப்பதம் நீக்கப்பட்டமை, தாயகத்தில் இராணு வமயமாக்கலின் தாக்கத்தைக் குறைமதிப்புக்கு உட்படுத்தும் முயற்சியாகும்.
அதேபோன்று, பொறுப்புக்கூறல் தொடர் பான பந்தியில், முன்னர் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் உள்ளடங்கலாக சம்பந் தப்பட்ட சகல தரப்பினராலும் நிகழ்த்தப் பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செயற் திறன் மிக்க பொறுப்புக்கூறல் செயன்முறை உறு திப்படுத்தப்படவேண்டும்’ எனக்குறிப்பிடப்பட் டிருந்தது.
தற்போது அதில் திருத்தங்கள் மேற்கொள் ளப்பட்டு வெறுமனே ‘பொறுப்புக்கூறல் உறுதிப் படுத்தப்படவேண்டும்’ என்று மாற்றியுள்ளனர். ‘செயற்திறன்மிக்க’ என்ற வார்த்தை நீக்கப்பட்டு ள்ளதன் மூலம், பொறுப்புக்கூறுதலின் தரம் மற்றும் வீரியம் குறித்த அழுத்தம் வெகுவாகவே குறைக் கப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஐ.நா.பிரேரணையில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள், இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிய நீதியையோ அல்லது நிலையான அரசியல் தீர்வையோ பெற்றுக் கொடுக்காது என்ற அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80வது கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கை ஜனாதி பதி அநுரகுமார திசாநாயக்க கூட, யுத்தத்தின் வலிகளை உணர்ந்திருப்பதாக கூறினார். காசாவில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றார். பலஸ் தீனத்தை அங்கீகரிக்கின்றோம் என்றார். ஆனால் தனது நாட்டில் அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினை பற்றி கிஞ்சித்தும் ஒரு வார்த்தையைக்கூட பிரதிபலித்திருக்கவில்லை. வறுமையும், போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயற்பாடுகளையும் முடக்குவது தான் முதல் பணியாக வெளிப் படுத்தியிருக்கின்றார். தேசிய இனப்பிரச்சினை, பொறுப்புக்கூற்ல உள்ளிட்டவற்றை மறுதலித் திருக்கின்றார்.
அவ்விதமான நிலைப்பாட்டில் உள்ள ஆட்சியில் உள்ள அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு இந்தப் பிரேரணையின் உள்ள டக்கம் சர்வதேச ரீதியாக அங்கீகாரம் அளிப் பதாகவே உள்ளது.
அந்த வகையில் பார்க்கின்றபோது, எதிர் காலத்தில் தமிழ் மக்கள் தங்ளுடைய தேசியப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நோக்கிய உரை யாடலை ஆரம்பிப்பதற்கு கூட வாய்ப்பை வழங் காத வகையில் தான் இந்தப்பிரேரணையின் உள் ளடக்கம் காணப்படுகின்றது.
ஆகமொதத்தில் திருத்தப்பட்டுள்ள இந்த வரைவு, தமிழ் மக்களின் வரலாற்றுத் துயரத்தை யும், அவர்களின் தற்போதைய அவலத்தையும் முழுமையாக மறைத்து நீதிக்கான உறுதியான பொறிமுறைகள் இல்லாத நிலையில், அரசாங் கத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு அதற் கான கால அவகாசம் கொடுக்கும் வெற்று ஆவண மாகவே இருக்கப்போகிறது.
61ஆவது, 64ஆவது அமர்வுகளில் இலங்கை குறித்த வாய்மொழிமூலமான அறிக்கை சமர்ப்பிப்புக்கான விடயமும் அகற்றப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையிடம் எதனை எதிர்பார்க்க முடியும்.