ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 59ஆவது கூட்டத்தொடர் 16ஆம் திகதி ஆரம்பம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 16ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை.
அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் இம்மாத இறுதியில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

அத்துடன் புதிய தீர்மானமொன்றைக் கொண்டு வருவது குறித்தும் ஆராயப்படும். இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வொல்கர் ரேக்கிடம் வடக்கு, கிழக்கு அரசியல், சிவில் தரப்பினர் கூட்டிணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு வலியுறுத்த வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயதிலக வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்திய கோரிக்கைளை முன்னெடுத்தால் ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் சுயாட்சிக் கோரிக்கைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.