இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்ததை அடுத்து, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நிகழ்வுகளில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்தான்புல் முழுவதும் 124 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக அந்த நகரத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இந்தச் சோதனைகளின் போது துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ‘அமைப்பு சார்ந்த ஆவணங்கள்’ பறிமுதல் செய்யப்பட்டன.
ஐஎஸ் ஆதரவாளர்கள் இந்த வாரம் துருக்கி முழுவதும், குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்தத் தீவிரமாகத் திட்டமிட்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போலீசார் சந்தேகத்திற்குரிய 115 நபர்களைக் கைது செய்துள்ளனர், மேலும் 22 பேரைக் கண்டறியும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
சந்தேகத்திற்குரிய நபர்கள் துருக்கிக்கு வெளியே உள்ள ஐஎஸ் செயல்பாட்டாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் ஐஎஸ் குழுவிற்கு எதிராக துருக்கி உளவுத்துறை முகவர்கள் சோதனைகளை நடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.



