ஏமாற்றத்தின் தொடர்கதை – விதுரன் 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் கடந்த செப்டெம்பர் 8ம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரையில் நடைபெறுகின்றது.
இந்நிலையில், 60ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப நாளிலேயே இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது அலு வலகத்தினால் தயாரிக்கப்பட்ட எழுத்து மூல அறிக் கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.
அவரது உரையின் சாரம்சமும், அறிக்கை யின் உள்ளடக்கமும் இலங்கையின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விவகாரங்களில் மனித உரிமைகள் பேரவையின் வகிபாகம் தொடர் பிலான எதிர்பார்ப்புகளில்மீண்டும் ஒரு முறை ஏமாற்றத்தையும், நம்பிக்கையின்மையையும் ஏற் படுத்தியுள்ளது.
ஐ.நா. உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது உரையில், கடந்த கால மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதுதான் நல்லிணக் கத்திற்கான ஒரேவழி என்று தெளிவாக வலியுறுத் தியுள்ளார். ஆனால், தற்போதைய அநுர அரசாங்கம், வழமைபோல, உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கப்போவதாகக் கூறி, சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கும் போக்கையே வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தினருக்கு மிகுந்த மனவேதனையையும், ஏமாற்றத்தையும் நிறைவாக அளித்துள்ளது.
இலங்கையில் போர் முடிந்து 16 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட மக் களுக்கு நீதி கிடைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஒவ்வொரு முறை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை அரசாங்கம் புதிய புதிய வாக்கு றுதிகளை ‘காலங்கடத்தும்’ அல்லது ‘ஏமாற்றும்’ நோக்கங் களுடன் வாக்குறுதிகளை அளிக்கிறது.
அந்த வகையில் இம்முறை, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், நாட்டில் ஒரு ‘புதிய அரசியல் கலாசாரம்’ உருவாகி வருவதாகவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், இந்த வாக்குறுதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எவ்வித நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை.
ஏனென்றால், இதற்கு முன்னர் ஆட்சியில் அமர்ந்திருந்த அனைத்து அரசாங்கங்களும் இதே போன்ற வாக்குறுதிகளை அளித்துவிட்டு அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டதோடு பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த மனித உரிமைகள் பேரவையையும் ஏமாற்றியும் இருந்தன. அதிலும் 2015ஆம் ஆண்டு, மைத்திரி-ரணில் கூட்டு அரசாங்கம் அல்லது நல்லாட்சி அரசாங்கம் என்று அடையாளப்படுத்தப்பட்ட தமிழ்த் தரப்பின் ஆதரவினையும் பெற்றுக்கொண்ட அரசாங்கம் கலப்பு விசாரணைப் பொறிமுறைக்கு இணை அனுசரணை வழங்கியது.
நிலைமாறுகால நீதிப்பொறிமுறையை அமுல்படுத்தப்போவதாகவும் அறிவித்தது. ஆனால் அதே அரசாங்கம் அதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்திருந்தது. இந்தச் செயற்பாடொன்றே இலங்கையின் ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வளவு உறுதியற்றவர்கள் என்பதை உறுதியாக வெளிப்படுத்துவதற்கான சான்றாகும்.
அவ்வாறான நிலையில் தான் தற் போதைய அநுர அரசாங்கமும் நல்லாட்சி அர சாங்கத்தின் அதே தந்திரோபாயத்தையே பயன் படுத்தி வருகின்றார்கள் என்பது மிகத் தெளி வாக புலனாகியிருக்கின்றது. இந்நிலையில் தற் போதைய அரசாங்கத்தின் வாக்குறுதிகள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டியதன் அவசியம் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில் காணப்படப்போவதில்லை.
அதேநேரம் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவ லக அறிக்கையில், இலங்கை அரசாங்கம் அளித்த முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருகின்றன. குறிப்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு வதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், அது இன்னமும் நீக்கப்படவில்லை. மாறாக, அதற்குப் பதிலாக ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இது, ஒரு சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக, அதே அடக்குமுறைக்கான இன்னொரு சட்டத்தை மாற்றிவைப்பதாகும்.
மேலும், மனித உரிமைச் செயற்பாட்டாளர் கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட் டோர் மீதான கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தொடர்வதாகவும், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கல் மற்றும் சிங்களமயமாக்கல் நடவடிக்கைகள் நீடிப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் பார்க்கின்றபோது, அநுர அரசாங்கத்தின் இந்தப்போக்கு, அதன் நல்லி ணக்க உரைகளுக்கு முற்றிலும் முரணானவை. உண்மையாகவே நல்லிணக்கத்தை விரும்பும் ஒரு அரசாங்கமாக இருந்தால், பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படை உரிமைகளையும், அச்சமற்ற வாழ்க் கையையும் உறுதி செய்ய வேண்டியது ஆகக் குறைந்த கடப்பாடாகும். ஆனால், இலங்கையில் அதற்கு நேர்மாறான நிலைமையே காணப்படுகிறது. செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் போனோர் போன்ற மிக முக்கியமான விவகாரங்கள் குறித்து உயர்தானிகருக்கு பதிலளித்து உரையாற்றிய வெளி விவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் உரையில் எந்தவிதமான உறுதியான தகவல்களும் இல்லை.
இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொறி முறையைக் கொண்டுவரப்போவதாகக் கூறியதை, ஐ.நா. உறுப்பு நாடுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டன. ஆனால், அந்தப் பொறிமுறை என்ன, அது எப்போது அமைக்கப்படும், என்ன காலக் கெடுவுக்குள் அது நீதியை வழங்கும் போன்ற எந்தக் கேள்விகளையும் அவை எழுப்பவில்லை.
உறுப்புநாடுகளின் இந்தப்போக்கானது, சர்வதேச சமூகம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துக்குக் கால அவகாசத்தை வழங்குவதன் மூலம் மீண்டும் ஒருமுறை தவறிழைக்கப்போகின்றது என்பதை தெளிவாக உணர்த்துவதாக இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட தமிழ் சமூகங்கள், உள் நாட்டுப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக் கின்றன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது சர்வதேச நீதிமன்றம் போன்ற வெளியகப் பொறிமுறைகளின் மூலமே நீதியைப் பெற முடியும் என்பதில் அவர்கள் உறுதியான நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள்.
உள்நாட்டில் காணப்பட்ட கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்க்கும்போது, இது ஒரு நியாயமான நிலைப்பாடாகும். போரின் போது இடம்பெற்ற இனவழிப்பு, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்ற பாரிய மீறல்களுக்கு இலங்கையின் ஆட்புல எல்லைக்குள் ஒரு நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறையால் நீதி வழங்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினால் சிறுகுழந்தையும் சிந்திக்கும்.
ஏனென்றால் ஆட்சிப்பீடங்களில் இருந்த எந்த இலங்கை அரசாங்கங்களும் இந்த விடயத்தில் இதயசுத்தியோடு நடந்து கொண்டிருக்கவில்லை.  காலத்துக்குக் காலம் தனது வாக்குறுதிகளை மாற்றிக்கொண்டுள்ளன.
ஒரு அரசாங்கம் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை உறுதியளித்தால், அடுத்த அர சாங்கம் அதை நிராகரிக்கிறது. இந்தச் சுழற்சி தொடர்கிறது. இந்நிலைமை தொடர்ந்தும் நீடித் தால் நீதியைக் கோரும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் சொற்ப காலத்தில் உயிரோடு இருக்க மாட்டார்கள். ஆகவே நீதிக்கோரிக்கை மெல்லச்சாகும் என்பது அரசாங்கங்களின் வியூக மாக இருக்கலாம்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் ஒரு தீர்க்கமான தீர்மானத்தை எடுக்காவிட்டால், இலங்கை ஆட்சியாளர்கள் இதேதந்திரத்தை அடுத்தடுத்த தசாப்தங்களுக் கும் பயன்படுத்துவார்கள் என்பதை மறுதலிக்க முடியாது.
அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஏழு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக தமது அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அதிகாரப்பகிர்வுடனான சுயநிர்ணய அரசியல் உரிமைகளைக் கோரிவருகின்றார்கள்.
இந்த விடயம் பற்றி ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அலுவலக அறிக்கையோ உயர்ஸ்தானிகரோ வாய்திறக்கவே இல்லை. அவ்வாறாக இருந்தால் குறித்த கோரிக்கையை சர்வதேச சமூகம் எவ்வாறு பார்க்கின்றது என்ற கேள்வி இங்கே எழுகின்றது.
இலங்கை அரசாங்கத்தின் ‘இலங்கையர் தினம்’ இனங்களுக்கு இடையிலான பிரச்சினைக ளுக்கு தீர்வை அளிக்கும் என்று கருதுகின்றதா?என்ற கேள்வியை இங்கே இயல்பாக எழுப்பு வதற்கும் வித்திட்டிருக்கின்றது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும், உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கும், சர்வதேச சமூகமும் ஒரு விடயத்தினை புரிந்து கொள்வது சாலச்சிறந்தது. அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அபிலாசைகள் நிறைவேற்றப்படாத வரை, இலங்கையில் நிரந்தரமான நல்லிணக்கம், அமைதியும் ஏற்படப்போவதில்லை.
இந்தச் சூழலில் பிரித்தானியா தலைமையில் கனடா, மாலாவி, மொன்டேனெக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் ‘இலங்கையில் மனித நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்’ எனும்  கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணை எப்படியிருக்கப்போகின்றது என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்