ஏப்ரல் 21 தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியது எவ்வாறு?

கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் அண்மைய நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டுகின்றன. இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு எவ்வாறு உரிமை கோரியது என்பது தொடர்பான தாகவல்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், சாட்சியம் வழங்கிய பயங்கரவாத மற்றும் விசாரணை பிரிவின் சிரேஸ்ட அதிகாரி இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் சாட்சியம் வழங்கியிருந்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் ஹசீம் நாட்டின் ஆறு இடங்களில் 11 பயிற்சி முகாம்களை நடத்தியதாகவும் சாட்சியாளர் இதன்போது கூறியுள்ளார். அந்த முகாம்கள் ஹம்மாந் தோட்டை, செட்டிகுளம், கண்டி, லேவெல்ல, மல்வானை, நுவரெலியா பிளக்பூல், நுவரெலியா சாந்திபுரம் மற்றும் மதவாச்சி தல்காவௌ ஆகிய இடங்களில் இருந்தாகவும் அவர் கூறினார்.அந்த பயிற்சிகளில் 25 முதல் 30 பேர் வரை பங்கேற்றிருந்தனர்.

எனினும், சில பயிற்சியாளர்கள் இறந்துவிட்டதாகவும், எஞ்சியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தாக்குதலுக்கு முன்னர் பயங்கரவாதிகளால் காணொளி பகிரங்கப்படுத்தப்பட்டதாகவும் அது கல்கிஸ்ஸ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்து ஒளிப்பதிவு செய்யப்பட்டதாகவும் சாட்சியாளர் கூறினார்.

எனினும் தாக்குதலுக்கு பின்னர் உயிரிழக்காத பயங்கரவாதிகள் கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஐ.எஸ் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய அமாக் என்ற செய்தி நிலையத்திற்கு அந்த காணொளி காட்சிகள் அனுப்பப்பட்டுள்ளது. அதனை அவர்கள் பார்வையிட்ட பின்னரே தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாகவும் அவர் தனது சாட்சியத்தில் கூறியுள்ளார்.