ஏன்? தையிட்டி விகாரையை அழிக்க முடியாதென பாராளுமன்றில் கேள்வி!

தொல்பொருள் அடையாளம், வரலாறு கொண்ட இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் இடித்து அழிக்கப்படலாம் என்றால் ஏன் சட்டவிரோதமாக, அமைக்கப்பட்ட தையிட்டி புத்த விகாரை இடிக்கப்படக்கூடாது? என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பௌத்த பிக்குகள் கன்னத்தில் அறையும் போது அமைதியாக வாங்கிக்கொள்ளும் பொலிஸாருக்கு இந்து குருமார் என்றால் இளக்காரமா? என கேட்கிறோம் என்றும் அவர் பாராளுமன்றில் தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டில் பல ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தை மையப்படுத்தி காணாமலாக்கப்பட்டும், கொலை செய்யப்பட்டும் உள்ளனர்.  பலர் இந்த மண்ணில் இல்லை. நிமலராஜன், தராக்கி சிவராம் போன்றோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை கொலை செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனைகள் வழங்கப்படவில்லை.
இதுபோன்று ரவிராஜ், திருகோணமலை மாணவர்களின் கொலைகள் தொடர்பிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா இருந்த காலத்தில் யாழ்.தையிட்டி கிராமத்தில் திஸ்ஸ விகாரை என்ற அடிப்படையில் தனியார் காணியில் விகாரை கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த விகாரை அவ்விடத்தில் இருக்கக்கூடாது என்றும், தமது காணிகளை வழங்குமாறும் காணி உரிமையாளர்களும் மக்களும் தொடர்ந்தும் போராட்டம் நடத்துகின்றனர்.

அந்த வகையில் கடந்த டிசம்பர் 21ஆம் திகதி போராட்டம் நடத்தப்பட்டது. ஜனநாயக வழியில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிஸாரின் கெடுபிடிகள் மற்றும் அராஜகத்தை அவதானிக்க முடிந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு வேலன்சுவாமியை மிக மோசமாக இழுத்து வாகனத்தில் பொலிஸார் ஏற்றினர். இதுவே பௌத்த பிக்குவாக இருந்தால் பொலிஸார் கைகட்டி நிற்கின்றனர். பௌத்த பிக்குகள் பொலிஸாரை கன்னத்தில் அறைகின்றனர்.

ஆனால் இந்துமத குருவாக இருந்தால் கேட்பாரில்லை என்பது போன்றுதான் பொலிஸார் செயற்படுகின்றனர்.
வலிகாமம் வடக்கு, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைகளின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் பொலிஸாரால் இழுத்துச் செல்லப்பட்டனர்.

கடந்த காலத்தில் பொலிஸார் அராஜகம் செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்கள். கடந்த காலங்களில் நடந்த விடயங்களையும் சமர்ப்பிக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய காலத்தில் சட்டத்திற்கு புறம்பாக அவசரகால சட்டத்தில் மிக மோசமான நடவடிக்கைளை இந்த அரசாங்கத்தின் பொலிஸார் ஆவேசத்துடன் செய்தனர் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

கடந்த 3ஆம் திகதி அங்கு புதிய புத்தர் சிலையை முன்வைக்க முயன்றபோது அதனை மக்கள் தடுத்தனர்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விடவும் அதிகமாக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.