இலங்கையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையை கருத்திற் கொண்டு எதிர்வரும் 18ம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமைகளும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றிரவு இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன், அரச ஊழியர்கள் பணியாற்றும் ஏனைய நான்கு நாட்களில் எத்தனை ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது என்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை, அந்தந்த நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.
பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறையும் இந்த தினங்களில் விடுமுறை தினமாக கருதப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியன அத்தியாவசிய சேவைகள் என கருதி, அந்த தினங்களில் விடுமுறை வழங்கப்பட மாட்டாது. அத்துடன், தனியார் துறையினருக்கும் இந்த தினத்தில் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் தனியார் துறையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.



