எமது நிலங்கள் அபகரிக்கப்படும் நிலையில் தான் ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம்: பா.அரியநேத்திரன்

PHOTO 2024 08 27 15 05 33 எமது நிலங்கள் அபகரிக்கப்படும் நிலையில் தான் ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம்: பா.அரியநேத்திரன்

எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் தான் நாம் இந்த ஐனாதிபதி தேர்தலை சந்திக்கிறோம் என தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்திற்கு காண்பிப்பதற்கே பொதுவேட்பாளராக போட்டியிடுகின்றேன். திலீபன் எதற்காக உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை அர்ப்பணித்தாரோ அத்தகைய தேவை இன்னும் இருந்துகொண்டு இருக்கிறது .எமக்கான தீர்வு கிடைத்தபாடில்லை.

ஐனாதிபதியாக வருவதல்ல நோக்கம். இந்த தேர்தல் மூலம் எமக்கான தீர்வை பொற்றுக்கொள்ள தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாவிருக்கின்றோம் என்பதை காண்பிப்பதற்காக போட்டியிடுகின்றேன்.

எமது மக்கள் நேரகாலத்துடன் பெருவாரியாக சென்று வாக்களிப்பதன் ஊடாக எமது அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியும்.

தற்போது ஒரு சிலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகிக் கொண்டிருக்கிறது . அவற்றை அவதானித்தால் தமிழர் பற்றியோ அவர்களுக்கான இனப்பிரச்சினை தீர்வுபற்றியோ எதுவும் இல்லை.

ஊழல், அபிவிருத்தி, ஒரே நாட்டுக்குள் தீர்வு, சமத்துவம் என்று கூறுகிறார்கள்.  சமத்துவம் என்றால் என்ன ? இந்த நாட்டில் தமிழன் ஐனாதிபதியாக வரமுடியுமா இதுதான் இந்த நாட்டின் சமத்துவமாகும்.

இதனை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் ஐனாதிபதியாக வருவது நோக்கமல்ல. ஐனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் ஒற்றுமையின் பலத்தை காண்பிப்பதே நோக்கமாகும். ஒற்றுமையின் பலம் தமிழ் மக்களின் அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் என்றார்.