எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை :மயான நிர்வாகசபை அறிவிப்பு

எந்தவகையான அச்சுறுத்தல்கள் வந்தாலும், சித்துபாத்தி மனித புதைகுழி வழக்கிலிருந்து விலகப் போவதில்லை என்று குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ள சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்த அவர் தமக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். தற்சமயம் அகழ்வுகள் பணிகள் இடம்பெற்றுவரும் செம்மணி மனித புதைக்குழியை அண்மித்த பகுதிகளில் மர்ம வாகனங்கள் நோட்டமிடுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

அந்த செய்திகள் முற்றும் முழுதாக உண்மை என்றும், அந்த மர்ம வாகனமானது தமது வீட்டு அருகாமையிலும் வந்திருந்ததாகவும், மனுதாரரான தம்மை அச்சுறுத்துவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, அச்சுறுத்தல்கள் மற்றும் எத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், வழக்கில் தாம் உறுதியாக இருப்பதாகவும், மக்களும் உறுதியாக தமது சாட்சியங்களை தருகின்றார்கள் என்றும் சித்துபாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.