200, வருடமாக இலங்கையில் வாழ்ந்து நாட்டின் பொருளாதார வளத்துக்கு அத்திவாரம் இட்டுவரும் மலையக தமிழ் உறவுகளின் அவலங்கள் வார்த்தைக ளால் வர்ணிக்கப்பட முடியாது.
“மழை விட்டாலும் தூவானம் போகவில்லை” என்பதைப்போல் வெள்ளம் சூறாவளி இல்லை எனி னும் மீளவும் தொடர்ச்சியாக மண்சரிவு அபாயம் ஏற் படும் நிலை உள்ளது.எங்கு எப்போது எப்படி மண்சரிவுகள் ஏற்படும் என்பதை திட்டமிட்டு கூறமுடியாமல் மலையக மக்களை மீளவும் அவர்கள் வாழ்ந்த அதே இடத்தில் குடியேறுவதற்கான சமாந்திரமான சமநிலை காணிகள் மலையகத்தில் கூடிய வரை இல்லை அதனால் அரசாங் கம் வீட்டு திட்டம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கினாலும் அச்சம் இன்றி இயற்கை அனர்த்தம் இன்றி மண்சரிவுகள் இன்றி நிம்மதியாக வீடுகளை அமைத்து வாழக்கூடிய சூழல் அறவே அங்கில்லை.
மலையகமக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்துவது என்பது அவர்களை பலிக்கடாக்களாக மாற்றுவதாகவே அமையும் எனவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் அரச காணிகளை ஒதுக்கி தனித் தனியான வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்தி மலைய கத்தில் ஆபத்தான இடங்களில் உள்ள மக்களை இடம் பெயர்வு செய்து உயிரை பாதுகாக்கவேண்டியது ஆட்சி யாளர்களின் கடமையாகும்.
இதற்கு மலையக அரசியல் வாதிகள் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தமது வாக்கு வங்கி அரசியலுக்காக மலையக மக்களை மீண்டும் அதே இடங்களில் குடியமர்த்துவது தமது தலையில் தாமே மண்ணை தூவுவதற்கு ஒப்பானதாகும். கடந்த காலங்க ளில் பலதடவைகள் இவ்வாறு மண்சரிவுகள் ஏற் பட்டுள்ளன.
2013, ஐனவரி,13,, மத்திய மாகாணத்தில் கண்டி, நுவரெலியா, மாத்தளை மற்றும் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்திலும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2014,அக்டோபர் ,29,ல், ஊவா மாகாணம் பதுளை மாவட்டம், ஹல்துமுல்ல பிரதேச செயலகப்பிரிவு, கொட்டபத்ம கிராம அலுவலர் பிரிவு கொஸ்லந்தை நகருக்கு உட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் பாரிய மண்சரிவு ஏற்பட்டு 38 பேர் உயிரிழந்தனர்.
2015,செப்டம்பர்,28, கொத்மலை, துல்கிரி, பண் ணல பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு 188 பேர் இடம்பெயர்ந்தனர், 2017 மே மாதம் வரை பலத்த மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா போன்ற இடங்களில் 269 குடும்பங்களைச் சேர்ந்த 1089 பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
2023, அக்டோபர், 28ல் பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் 13,000 சதுர கிலோமீற்றர் நிலப்பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுதாக ஆய்வில் தெரிய வந்தது.
2025, நவம்பர்,26, தொடக்கம் தற்போது டிசம்பர் 13, வரை மலையகப் பகுதிகளில் எந்த நேரத்திலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண் மேடுகள் உள்ள இடங்களில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்களி டம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுவரை 215, இடங்கள் மண்சரிவு ஏற் பட்டதாக கூறப்படுகிறது
இவ்வாறு மலையக மக்களின் மண் சரிவு இழப்புகள் நீண்டு செல்கிறது. 2025, நவம்பர் அனர்த்தத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பாதிக்கப்பட்ட மலையக மக்களிடம் மலையகத்தில் இருப்பிடங்களுக் கான காணி இல்லை எனில் வடக்கு கிழக்கில் குடியமர சம்மதம் என மகிழ்ச்சியுடன் கூறினார்.
2014, அக்டோபர்,29, ல் பதுளை மாவட்டத் தில் மண்சரிவால் 38, பேர் உயிரிழந்தபின்னர் ஒரு சந்திப்பின்போது அப்போது மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளு மன்ற உறுப்பினர்களாக இருந்த பொ.செல் வராசா, பா.அரியநேத்திரன் (நான்), சீ.யோகேஷ் வரன் ஆகிய மூவரும் மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினோம் மலையக மக்களை மட்டக்களப்பில் குடியமர்த்த நீங்கள் முயற்சி செய்தால் நாங்கள் வரவேற்போம் அதற்கான ஆதரவை தருவோம், மட்டக்களப்பு மாவட்ட மக்களும் அதற்கு பூரண ஆதரவை தருவார்கள் என கூறியிருந்தோம் அதனை அவர்கள் ஏற்றனர் ஆனால் எந்த முயற்சியும் எடுக்கவில்லை 2014ல் அவர்களை வடகிழக்கில் குடியமர்த்தியிருந்தால் 2025 தற்போது ஏற்பட்டு நிர்க்கதியான மலையக மக்களை காப்
பாற்றியிருக்கலாம்.
இப்போது அரசால் வீடுகட்டவும், காணி கொள்வனவு செய்யவும் நிதி ஒதுக்கப்படும் என கூறும் இந்த சந்தர்ப்பத்தில் குறுகிய அரசியல் லாபங்களை மறந்து மலையக மக்களின் உயிரை காப்பாற்றவேண்டுமானால் அவர்களை வடகிழக்கில் குடியமர்த்துவதே ஒரே தீர்வு. இல்லைஎனில் இன்னும் ஒரு பேரழிவு மீண்டும் ஏற்பட்டால் மலையக மக்களை கடவுளாலும் காப்பாற்றமுடியாது என்பதே உண்மை. எனவே இன்னும் எத்தனை காலம்தான் மலையக மக்களை ஏமாற்றுவது..?
சிந்தியுங்கள்.



