எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (3) டில்லியை சென்றடைந்தார். தனது 3 நாட்கள் டில்லி விஜயத்தில் பல முக்கிய சந்திப்புக்களிலும், கலந்துரையாடல்களிலும் எதிர்க்கட்சி தலைவர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்களுக்கான எவ்வித ஏற்பாடுகளும் இல்லை என நம்பத்தகுந்த அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் உள்ளிட்ட சில உயர்மட்ட அரசியல் பிரமுகர்களை, எதிர்க்கட்சி தலைவர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலக ஊடகப்பிரிவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப்பிரிவோ சஜித் பிரேமதாசவின் இந்திய விஜயம் குறித்து எந்த தகவல்களையும் வழங்கவில்லை.
இந்நிலையில் செவ்வாய்கிழமை (4) சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய பேரவை ஏற்பாடு செய்துள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றில், ‘இலங்கை – இந்திய இருதரப்பு உறவுகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சிறப்புரையாற்றவுள்ளார். டெல்லியிலுள்ள விமர்ஷ; விரிவுரை மண்டபத்தில் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடலில், மாலை 4 மணியளவில் சஜித் உரையாற்றவுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் 3 மூத்த உறுப்பினர்கள் டில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இது குறித்து எவருக்கும் அறிவிக்கப்படவில்லை. சஜித்தின் இந்த உத்தியோகபூர்வ சுற்றுப்பயணத்தில் அவருடன் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த மூவரின் பெயர்கள், ஏனையோருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.



