நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும் போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்டுமே முடிகிறது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்டங்களை இயற்றியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடி ஊடாகச் சம்பாதித்த சொத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு சினமன் கிரேன்ட் விடுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கோருவதாகவும் சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் இலங்கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையை கூற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.