சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்க இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 21ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
இந்த நிலையில், ஆர்ப்பாட்டம் ஒன்றும் ஊடகவியலாளரின் மரணத்திற்கு நீதி கேட்டு முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் கருத்து தெரிவிக்கையில், ”கடந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, ரணில் ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி, மைத்திரி ஆட்சிக் காலத்தில் கிடைக்காத நீதி அனுர அரசாங்கத்தின் காலத்திலாவது கிடைக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றார்கள். கைது செய்யப்படுகின்றவர்கள் முறையான விசாரணைக்கு உட்படுத்தி மனித குலத்திற்கு எதிராக அவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும், அவர்களால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய உண்மையை, குறிப்பாக நடேசனின் படுகொலை பற்றிய உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அதுதான் நாங்கள் விடுக்கும வேண்டுகோள். இந்த பகிரங்க வேண்டுகோள் தொடர்பில் அவதானம் செலுத்தி குற்றவாளியை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த வேண்டும். அதன் மூலமாக ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தை ஊடக தர்மத்தை பாதுகாக்கின்றீர்கள் என்ற விடயத்தை உறுதிப்படுத்த வேண்டுமென கோருகின்றேன்.” என்றார்.