ஊடகவியலாளர்களின் விழிப்புணர்வுப் பயணம்

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுபடுத்தும் பொருட்டு வடக்கு முழுவதும் மக்களை சந்திக்கும் விழிப்புணர்வு பயணத்தினை யாழ். ஊடக அமைப்பு இன்று தொடங்கியது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர் நினைவுத் தூபியில் சுடரேற்றி மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வில் யாழ். ஊடக அமைப்பில் அங்கம்  வகிக்கும் ஊடகவியலாளர் பங்கு கொண்டிருந்தனர்.

இன்று தொடங்கியுள்ள விழிப்புணர்வுப் பயணம் தொடர்பில் ஊடக அமைப்பினர் தெரிவிக்கும் போது, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை நினைவுகூரும் இன்றைய நாளில், யாழ்.ஊடக அமைப்பு, ஊடகவியலாளர்களிற்கு  நீதி வேண்டும் என்பதை வலியுறுத்தியது.

குறிப்பாக ஊடகவியலாறர்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவிற்குக் கொண்டு வருவது ஆட்சிப் பீடத்திலேறும் அனைத்து தரப்புகளினதும் கடமை என யாழ். ஊடக அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன் முதல் கட்டமாக நவம்பர் 2ஆம் திகதி சனிக்கிழமை குடாநாடு முழுவதுமாக மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றது.

படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியிலிருந்து புறப்படும் விழிப்புணர்வுப் பயணத்தின் இணையும் ஊடகவியலாளர்கள் மக்களைச் சந்தித்து இது குறித்து தெளிவுபடுத்துவர். தொடர்ச்சியாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஊடக அமைப்புகளுடன் இணைந்து விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ். ஊடக அமைப்பு அறிவித்துள்ளது.