உள்ளூராட்சி மன்ற தேர்தல்: செல்வம் அடைக்கலநாதன் கருத்து

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது இரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சிகளுடன் இணைந்து யாழ் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக கூட்டணியின்   பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

‘இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிட உள்ளது’
‘அதற்கான கட்டுப்பணத்தை செலுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’ என்று அவர் கூறியுள்ளார்.

‘அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுக்கப்பட்டது’.
‘எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளோம் என்று தெரிவிக்கவில்லை’ எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

‘9 கட்சிகளும் இணைந்து கலந்துரையாடலை மாத்திரமே முன்னெடுத்தோம். எனினும் இக்கூட்டு யாழ்ப்பாணத்தில் மாத்திரமே அமைய இருக்கின்றது’. ‘முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் கட்சி தனித்து போட்டியிட உள்ளது’. ‘ஐங்கரநேசனின் கட்சி தனித்து போட்டியிடுகின்றதா? இல்லையா என்று தெரியவில்லை. எனினும் இந்த அணியில் இருந்து விலகி உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்’ என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.