உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை பெயரிட வலியுறுத்தி வர்த்தமானி…

உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களின் பெயர்களையும் சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சகல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கும் அறிவுறுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவுக்குள் குறித்த விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜுன் மாதம் 2ஆம் திகதிமுதல் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் அவகாசம் இன்று (27) நள்ளிரவுடன் முடிவடைகிறது. அதன்படி, குறித்த அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நிதி ஒழுங்குபடுத்தல் சட்டத்தின்படி, அத்தகைய தகவல்களை வழங்காத வேட்பாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சுமார் 79,000 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்த நிலையில், இதுவரையில் 10,000 பேர் மாத்திரமே தேர்தல் செலவறிக்கையை கையளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.