உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிடவுள்ள தமிழரசு கட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கொழும்பு வாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவர் சி.இரத்தின வடிவேல் தெரிவித்தார்.  அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இது குறித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ‘தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்பு வாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்துள்ளார்.