உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் ஏமாறப் போவதில்லை – இராதாகிருஸ்ணன்

உள்ளூராட்சி சபைகளின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கொண்டு செல்லவோ பாராளுமன்றத்தில் பேசவோ தேவையில்லை. அவை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு காணப்படுகிறது. எனவே, அவற்றுக்கு ஜனாதிபதி நிதியை வழங்கவும் தேவையில்லை. பொதுத் தேர்தலைப் போன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெருந்தோட்ட மக்கள் ஏமாறப் போவதில்லை என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

தலவாக்கலையில் வியாழக்கிழமை (1)  நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆண்டு மே தினக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாட்சம்பளம் வழங்கப்படும் எனக் கூறினார். ஆனால், இதுவரையில் அந்த சம்பளம் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 1700 ரூபா குறித்து பேசுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் என்று பேசுவது? பெருந்தோட்டத் தொழிலாளர்கள் என்று 1700 சம்பளத்தைப் பெற்றுக் கொள்வது? அதேவேளை அரிசி, மா, தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

சம்பள அதிகரிப்பின்றி இந்த விலை அதிகரிப்புக்களை பெருந்தோட்டத் தொழிலாளர்களால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது. நுவரெலியா மாவட்ட மக்கள் மாத்திரமே ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அதிக வாக்குகளை வழங்கியிருந்தனர். எவ்வாறிருப்பினும் பொதுத் தேர்தலில் யாரெனத் தெரியாதவர்களுக்கு நுவரெலியா மக்களும் வாக்களித்துள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும்.

எவ்வாறிருப்பினும் எனக்கும் திகாம்பரத்துக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகின்றேன். எனவே உங்களை மறந்து நாம் என்றுமே வேலை செய்ய மாட்டோம். 24 மணித்தியாலங்களில் ஏற்படுத்துவதாகக் கூறிய எந்தவொரு மாற்றங்களையும் இதுவரை ஜனாதிபதி மேற்கொள்ளவில்லை. வாக்குகளுக்காக மாத்திரம் எரிபொருட்களின் விலைகள் மிக சொற்பமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

எனவே மக்கள் எதிர்கால தீர்மானங்களை சிந்தித்து எடுக்க வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத சபைகளுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். எமக்கு ஜனாதிபதியின் நிதி தேவையில்லை. நான் பிரேதசசபைத் தலைவராக இருந்த போது அரசாங்கத்திடமிருந்து நிதியைப் பெற்று செலவிடவில்லை.

எமது வருமானத்தைக் கொண்டே செலவுகளை முகாமைத்துவம் செய்தோம். உள்ளுராட்சிசபைகளின் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் கொண்டு செல்லவோ பாராளுமன்றத்தில் பேசவோ தேவையில்லை. அவை தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் உள்ளுராட்சிமன்றங்களுக்கு காணப்படுகிறது. அரசாங்கம் எண்ணுவதைப் போன்று நாம் தொடர்ந்தும் ஏமாறுபவர்கள் அல்ல. எதிர்காலத்தில் சஜித் பிரேமதாச தலைமையில் சிறந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கு மலைய மக்கள் என்றும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவர் என்றார்.