வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் கொள்கை ரீதியான நிலைப்பாடு புறக்கணிக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, இலங்கை தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையிலான இருவேறு சந்திப்புகள் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றுள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
அதேநேரம், இலங்கை தமிழரசு கட்சிக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. இதன்படி, தங்களுக்கு 5 சபைகளில் தவிசாளர் பதவி வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழரசு கட்சியுடனான சந்திப்பின் போது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரியுள்ளது.
இதுவே அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு சிறந்த ஆரம்பமாக இருக்குமென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சந்திப்பு தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தங்களுக்கு இடையே பொதுவானதொரு இணக்கப்பாடு மாத்திரமே எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றங்களில் முன்னிலையில் உள்ள கட்சிகளுக்கு அந்த சபைகளின் தவிசாளர் பதவி வழங்க வேண்டும் எனவும் இலங்கை தமிழரசு கட்சி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் கொள்கை ரீதியான பேச்சுவார்த்தை தயாராக இல்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒன்றுமையாக இருக்க வேண்டும் என எண்ணி தமிழ் மக்கள் ஆணை வழங்கியுள்ளனர்.எனினும் குறித்த இரண்டு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பெற்றுக் கொண்ட ஆசனங்கள் தொடர்பிலேயே கவனத்தில் கொள்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் உள்ளூராட்சிமன்றங்களில் முன்னிலையில் உள்ள கட்சிகளுக்கு ஒத்துழைப்பு அவசியமாயின் அதற்கு தங்களது தரப்பு முன்வருமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.