உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கை நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் எதிர்வரும் மே மாதம் 3 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, அனைத்து பிரசார நடவடிக்கைகளும் அன்று நள்ளிரவுடன் நிறைவு செய்யப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அஞ்சல் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றுடன் (29) நிறைவடைந்துள்ளன. கடந்த 24 ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முதற்கட்டமாக அஞ்சல் மூலம் வாக்கெடுப்பு நடைபெற்றதுடன், நேற்று மூன்றாவது நாளாக அஞ்சல் மூல வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

இந்த முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அஞ்சல் மூல வாக்களிப்பிற்காக 6 இலட்சத்து 63 ஆயிரத்து 499 பேர் விண்ணப்பித்த நிலையில், அவற்றில் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 490 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

அதேநேரம், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்துக்கு சென்று தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்தி, தமக்கான வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சிடும் பணி நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.இதன்படி, உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக 2 கோடியே, 52 இலட்சத்து 6 ஆயிரத்து 533 வாக்குச் சீட்டுகள் முன்னர் அச்சிடப்பட்டதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து 45 இலட்சத்து 97 ஆயிரத்து 608 வாக்குச் சீட்டுகள் மீண்டும் அச்சிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.