உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை!

‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை’ என்றும் ‘அதனை பாராளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16ற்கு அமைய, பிரதமர் ஹரினி அமரசூரிய சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம்; பாராளுமன்றம் இன்று (14) முற்பகல் கூடிய போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘இந்த சட்டமூலத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் பிரிவுகள், அரசியலமைப்புடன் முரணாக இருப்பதால், அதனை விஷேட பெரும்பான்மை வாக்குகளால் மாத்திரமே அதை நிறைவேற்ற முடியும்’ என்று 3 நீதியரசர்கள் அடங்கிய குழாமில் இருவர் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.

பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் வரவு செலவு திட்ட விவாதம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பன இடம்பெறவுள்ளன.

எனவே, இவற்றை கருத்திற் கொண்டு உரிய தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.