உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கிறது: ஜப்பானிய தூதுவர் கருத்து

உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கிறது என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசமோட்டோ தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருவதாக அவர்  தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

முந்தைய ஆட்சியாளர்களின் தவறான முடிவுகளால் இலங்கையிலிருந்து தூரமான முதலீட்டாளர்கள் தற்போதைய அரசாங்கத்தின் திட்டங்கள் காரணமாக தற்போது இலங்கையை நெருங்கி வருகிறது.வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி என்பன நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு அடிப்படை தூண்கள் என்பதை நாம் உறுதியாக நம்புவதால் உலகம் முழுவதும் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஜப்பான் ஆதரிக்கிறது.

கடந்த ஆண்டு இலங்கையின் முதல் தேசிய வரி செலுத்துவோர் தொடர்பான தொகை மதிப்பின் படி  84 வீதமானோர் வரி செலுத்தும் விருப்பத்தை ஊழல் நேரடியாக பாதிக்கிறது எனக்குறிப்பிட்டனர்.

ஊழல் முதலீட்டைத் தடுக்கிறது.வர்த்தகம் செய்வதற்கான செலவை அதிகரிக்கிறது.நிலையான அபிவிருத்தி மற்றும் மனித பாதுகாப்பை தடுக்கிறது.ஊழல் காரணமாக வளர்ந்து வரும்  நாடுகள் ஆண்டுதோறும் 1.3 டிரில்லியன் அமெரிக்க  டொலர்களை இழக்கின்றன.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி சுட்டிக்காட்டியது போல வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதத்திற்கும் அரச பொறுப்பேற்க வேண்டும் என்கின்ற இந்த  செயல் திட்டம் இலங்கை சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்றார்.