காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக் கூடிய வகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,941 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
‘வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுகிறது’ என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.
காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.