உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்கும் வர்த்தமானியை மீளப் பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை

உரித்தற்ற காணிகளை அரசுடமையாக்குவது தொடர்பில் காணி உரித்து நிர்ணய திணைக்களத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறுமாறு வடக்கைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருந்தனர். இந்தநிலையில் குறித்த வர்த்தமானியை மீளப்பெறுவதற்கான சட்டஆலோசனைகளை பெறுவதற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரினால் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இதன்படி, வர்த்தமானி அறிவிப்புக்கு எதிர்ப்பும் அது தொடர்பான தவறான கருத்துக்களும் வடக்கு மாகாணத்தில் வாழும் மக்களிடையே எழுந்துள்ளதாகவும் குறித்த வர்த்தமானி அறிவிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வடக்கு மாகாண அரசியல் தரப்பினர் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

‘இந்த வர்த்தமானி அறிவிப்பில் உரிமைக்கோரல்களைச் சமர்ப்பிப்பதற்கு மூன்று மாத காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதன்பிறகு உரிமை கோரல்கள் சமர்ப்பிக்கப்படாத நிலப் பகுதிகளை அரசாங்க சொத்தாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர்கள் தம்மிடம் கூறியுள்ளதாக அவர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வட மாகாணத்தில் நிலவிய போர் சூழ்நிலை காரணமாக மக்களிடம் தங்கள் நிலங்களின் மீதான உரித்தை நிரூபிப்பதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் பலர் வெளிநாடுகளில் வசிப்பதால் அவர்கள் தங்களின் உரித்தை முன்வைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர் என்றும்’ தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் தலைமையில் குறித்த பிரதேச அரசியல் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்படி, குறித்த காரணங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி தீர்வு செயல்முறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக மக்கள் பிரதிநிதிகளின் உடன்பாட்டை பெற்று இந்த விடயத்தை முன்கொண்டு செல்வதற்கும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.

உரிய ஒப்புதலை பெற்றதன் பின்னர் காணி நிர்ணய நடவடிக்கைகளை மீள் அமைப்பதற்கு அவசியமான விடயங்களை முறையாக தயாரித்து அது தொடர்பில் வடக்கு பகுதி அரசியல் தலைவர்களை முறையாக அணுகி இந்த விடயத்தை முன்னோக்கி கொண்டு செல்வதே காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிலைப்பாடாகும் என்றும் அந்த அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதற்கான சட்டஆலோசனைகளை வழங்குமாறும் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் சட்டமா அதிபரிடம் கோரியுள்ளார்.