உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் சாதனை

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, தமிழ்மொழி மூலம் குறித்த பரீட்சைக்கு தோற்றிய இரண்டு மாணவர்கள் நாடளாவிய ரீதியில் முதல் மூன்று இடங்களுக்குள் உள்ளனர். அதற்கமைய, உயிரியல் பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியைச் சேர்ந்த ஜமுனாநந்தா பிரணவன் நாடளாவிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.

அத்துடன், பௌதீக விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் கந்ததாசன் தசரத் நாடளாவிய ரீதியில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை, கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை பல்கலைகழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.