உப்பில்லா நாடு குப்பையிலே பா.அரியநேத்திரன்

சுற்றிவர உப்புக்கடல் சூழ்ந்த இலங்கை, இன்று உப்புக்கு தட்டுப்பாடு கொண்ட நாடாக மாறியுள் ளது. அதே நேரம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுமாதம் அநுர அரசின் ஆட்சியில், ‘ஊழலை இல்லாமல் செய்வோம்’ எனக் கூறி ஆட்சியில் ஏறியவர்கள் உப்பை இல்லாமல் செய்துள்ளனர்.
உணவுக்கு மிக அத்தியாவசிய பொருளாக கருதப்படுவது உப்பாகும். உப்பை பற்றி எமது முன்னோர்கள் “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்ற பழமொழியும். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை’’ என்றும்  கூறினர். உணவுக்கு உப்பு முக்கியத்து வம் வாய்ந்தது போல, அவசியப்படும் வேளைகளில் நமக்கு கைகொடுப்பவர்களை நீங்கள் உங்கள் வாழ்நாளில் மறந்து விடாதீர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
இப்படியான உணவின் முக்கியத்துவம் வாய்ந்த உப்பு, இலங்கையில் ஆதிகாலம் தொட்டு இருக்கின்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948, தொடக்கம் 2024, வரையும் 76, ஆண்டுகளில் உப்பு எந்த நாட்டில் இருந்தும் இறக்குமதி செய்ததாக வரலாறுகள் இல்லை. ஆனால் 2025, ல் புதிய அநுராவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சீனியைவிட உப்புக்கு விலை கூடியதாக உள்ளது. உப்பளம் என கருதப்படும் ஆனையிறவு உப்புத்தொழில் சாலை கடந்த காலங்களில் பெருமளவான உற்பத்தியை ஈட்டித்தந்தது. இலங்கையில் பல மாவட்டங்களிலும் ஒரு காலத்தில் ஆனையிறவு உப்பு முன்னணியில் இருந்தது. தற்போது ஆனையிறவு உப்பில் கூட இனவாதம் பேசும் நிலையில் அநுர அரசின் அமைச்சர்கள் உள்ளனர். அமைச்சர் ஹிந்துன்நெத்தி “பிரபாகரனின் உப்பு என்று இனி இல்லை” என பாராளுமன்றத்தில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
உப்புக்கு இனி ‘அநுராவின் உப்பு’ என பெயரிட்டாலும் சிங்கள மக்களின் வாக்குகளை தென்பகுதியில் பெற முடியும் என்ற சிந்தனையில் இப்படியான இனவாத கருத்தை ஒரு அமைச்சர் பேசியுள்ளாரோ என சிந்திக்க தோன்றுகிறது.
புதிய அரசியல் யாப்பு திருத்தம், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, பொருளாதார மீட்சி, குற்றம் செய்தவர்களை தண்டித்தல் என பல கோஷங்களை எழுப்பி ஆட்சி பீடத்தில் ஏறியவர்கள், ஆறுமாதம் கடந்தும் எதிர்பார்த்த எதையுமே செய்ய வில்லை.
கடந்த 2024,ல் 159, பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மிக அதிகமான வாக்கு களையும் ஆசனங்களையும் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த ஏனைய 21, மாவட்டங்களில் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசுக்கு கடந்த 2025, உள்ளூராட்சி சபை தேர்தலில் எதிர்பார்த்த ஆசனங்களும் வெற்றிவாய்ப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாகாணசபை தேர்தலை தாம் அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்தப் போவதாக கூறினாலும் உள்ளார்ந்தமாக மாகாணசபை தேர்தலை நடத்தி இன்னும் பின்னடைவை சந்திக்க இவர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதையே புரிந்துகொள்ள முடியும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பதை போல் ‘உப்பில்லா நாடும் குப்பை யிலே’ என்பதையே எதிர்வரும் காலத்தில் தென்பகுதி மக்களும் நிருபிப் பார்கள்.