ஈழத்தமிழர் மனிதஉரிமைகளுக்கு அனைத்துலகப் பொறி முறை உடன்தேவை

369 Views

உலகம்  கொரோனோ வைரசின் தாக்கத்தால் தனது சமுக பொருளாதார அரசியல் நடைமுறைகளைச் செயற்படுத்த இயலாதுள்ள மனிதகுலத்தின் மிகமிக அவலமான இந்தக்காலகட்த்தில், அரசியலுக்கு அப்பாற்பட்ட முறையில் மனிதத்துவத்தைக் காக்கும் பெருமுயற்சியில் உலக நாடுகள் அனைத்துமே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த மனிதகுலத்தின் இக்கட்டான நிலையையும் கூடத் தங்கள் அரசியல் இலாபத்திற்குப் பயன்படுத்தும் கேவலத்தைச்; சிறிலங்கா தொடரட்கிறது. மூன்று சிறுவர்கள் உட்பட எட்டுத்தமிழரை,அவர்கள் இனஅழிப்புச் செய்யப்படுவதற்கான சிறு தடயம் கூட இருக்கக் கூடாதென்பதற்காகச் சத்தமின்றி அவர்களைக் கொல்லவேண்டும் என்ற பொறிமுறையாக, அவர்களின் கழுத்தில் படுகாயத்தை ஏற்படுத்தி அந்த அதிர்ச்சியினாலும் இரத்தப்பெருக்கினாலும் அவர்களைக் கொன்றழித்த கொடூரமான இனக்கொலையைச் செய்தவர் எனச், சிறிலங்காவின் நீதிமன்றமே மரணதண்டனை விதித்து அதனைச் சிறிலங்காவின் உயர்நீதிமன்றமே மீள் உறுதி செய்தவரான, சிறிலங்காப் படையினனான சுனில் ரத்தநாயக்காவை, அந்தப்போர்க்குற்றங்கள் நடத்த காலத்தில் சிறிலங்காப் படைகளுக்குக் கட்டளையிடும் நிலையில் இருந்த இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சா, ‘ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு’ என்ற பெயரில் விடுதலை செய்துள்ளார்.

சிறிலங்காவின் உயர்நீதிமன்றம் ரத்தநாயக்காவின் தீர்ப்பை உறுதிசெய்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளி தன்னளவில் குற்றமனோநிலையில் இருந்து எந்தவித சீர்திருத்தத்தையும் பெறுவதற்கான சந்தர்ப்பமே இடம்பெறுவதற்குக் காலஅவகாசமே இல்லாத நிலையில், அந்தக் குற்றவாளிக்கு இன்றைய ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதி என்ற அப்பட்டமான அரசியல் செயற்பாடாக வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு என்பது கருணையின் அடிப்படையில் அல்ல போர்க்குற்றவாளிகள் கதாநாயகர்களாகச் சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளால் போற்றப்படுவார்கள் என்ற சிங்களபௌத்த மேலாண்மை அரசியல் கோட்பாட்டினை உறுதிப்படுத்தும் செயலாக இடம்பெற்றுள்ளது.

இது ஈழத் தமிழ் மக்களை இன்றும் இனம்காணக்கூடிய அச்சத்துடன் சிறிலங்கா அரசாங்கம் வாழவைத்துää அவர்களின் அரசியல் பணிவைப் பெறுகிறது என்ற உண்மையை உலகுக்கு மீண்டும் தெளிவாக நிரூபித்துள்ளது. சிறிலங்கா அரசத்தலைவர் சர்வாதிகாரத்தனமான முறையில் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியமை என்பது,ஈழத் தமிழ் மக்கள் தங்களின் உள்ளகசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தற்போது உள்ள சிறிலங்கா அரசாங்கத்திடம் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய எந்த வளர்ச்சிகளையும் பெற இயலாது என்பதையும் மீளவும் உலகிற்குத் தெளிவாக்கியுள்ளது.

அத்துடன் ஈழத் தமிழ்மக்கள் தங்களின் வெளியகசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் உலக நாடுகளிடமும் அனைத்துலக அமைப்புக்களிடமும் தங்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதியான வளர்ச்சியைத் தாங்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என விடுத்து வரும் அவர்களின் வெளியகச் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையை உலக நாடுகளும் அமைப்புக்களும் உடனடியாகக் கவனத்தில் எடுக்கவேண்டிய தேவையையும் வெளிச்ச மிட்டுக்காட்டியுள்ளது. சிறிலங்காவின் இன்றைய நடைமுறைகள் சிறிலங்காவுக்கு உள்ளகப் பொறிமுறை மூலம் ஈழத்தமிழர்களுக்கான மனிதஉரிமையையோ நீதியையோ வழங்குவதற்கான எண்ணம் கூட இல்லை என்பதை உலகுக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

இதனாலேயே உலகின் முக்கிய நாடுகளும் அமைப்புக்களும் ஊடகங்களும் இச்செயல்கள் குறித்த பலத்த கண்டனத்தைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

எனவே சிறிலங்காவின் உள்ளகப் பொறிமுறைகள் ஈழத்தமிழரின் மனித உரிமைகளை மீள்விக்கும் நடைமுறையாகாது என்பதனால் அனைத்துலகப் பொறிமுறைகள் உடன் தொடங்கப்பட வேண்டும்.

இல்லையேல் உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் முன்னுதாரணங்களாகச் சிறிலங்காவின் செயல்கள் தொடரும். இந்த உண்மைகளை விளக்கிப் புலம்பெயர் தமிழர்கள் கொரோனோ அவலங்களுக்கு மத்தியிலும், அனைத்துலகப் பொறிமுறைகள் உரிய காலத்தில் தொடங்கப்படுவதற்காக உழைக்க வேண்டிய நேரமிது.

-இலக்கு மின்னிதழ்-

Leave a Reply