ஈழத்தமிழரின் அரசியல் ஆவணங்களும்  இலங்கை அரசின் ஏமாற்றங்களும்.! : பா.அரியநேத்திரன்

கடந்த 2026 ஜனவரி  20 ல் இலங்கை தமிழரசுக் கட்சி பதில் தலைவர் சி வி கே சிவஞானமும், பதில் செயலாளர் எம் ஏ சுமந்திரனும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி என சங்கு சின்னத்துடன் இயங்கும் ஈபிஆர்எல்எவ் சுரேஷ்பிரமச்சந்திரன், ரெலோ செல்வம் அடைக்கலநாதன், புளட் சித்தார்த்தன், ஜனநாய போராளிகள் கட்சி வேந்தன், சமத்துவக்கட்சி மு.சந்திரகுமார் ஆகியோர் கூடி தமிழ் மக்களு டைய அபிலாசைகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு ஆவணம் ஒன்றை தயாரிக்க தாம் முடிவெடுத்துள்ளதாக ஊடகங்களில் சுமந்திரனும்,சுரேசும் கூறியிருந்தனர்.
இதுவரையில் 78 வருடங்களாக தமிழ் தலைவர்கள் தயாரித்த ஆவணங்களும், கையளித்த உடன்படிக்கைகளும் குப்பைத்தொட்டியில் போனதுதான் மிச்சம். இப்போது இவர் கள் ஏதோ புதிதாக  தயாரிக்கப் போகிறார்கள் என்று நாடகம் காட்டுகிறார்கள்.
1948 டிசம்பர் 18 ல் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை தந்தை செல்வா ஆரம்பித்ததன் நோக்கமே ஈழத்தமிழ் இனத்துக்கான சமஷ்டி அடிப்படையிலான “தமிழரசு” ஒன்றை நிறுவும் நோக்கிலேயே அந்த கட்சிக்கு இலங்கை”தமிழரசு” கட்சி என்ற  பெயரை சூட்டினார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1949  டிசம்பர் 18 ல் ஆரம் பித்து அன்று தந்தை செல்வா ஆற்றிய தலைமை உரையில்  கூறியது. “இலங்கையில் வாழுகின்ற தமிழ் பேசும் மக்கள் விடுதலை பெறுவதற்காக உழைக்கும் ஒரு ஸ்தாபனத்தை அமைக்கவேண்டும் என்ற தனி நோக்கத்துடன் நாங்கள் எல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம் இப்போதிருக்கும் நிலைமையில் நாம் விடுதலை பெறுவதற்கு ஒரு “சுதந்திர தமிழரசை” நிறுவுவது இன்றியமையாதது என்பது எமது திடமான நம்பிக்கை” என பேசியிருந்தார்.
அந்த கட்சியின் முதலாவது மாநாடு 1951 ஏப்ரல் 13, 14, 15 ஆம் திகதிகளில் திருகோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் தந்தை செல்வா தலைமையில் நடந்தது. இம்மாநாட்டில், தமிழ் பேசும் மக்கள் ஒரு தனி யான தேசிய இனம் என்றும், சிங்களவர்களுடன் சமஷ்டி அடிப்படையில் இணைந்து வாழ விரும்புவதாகவும் பிரதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சமஷ்டி கொள்கை இருந்தமையால் அதனை சமஷ்டிக் கட்சி என்ற பெயரும் தமிழரசுக்கட்சி பெற்றது. ஈழத்தமிழர்களுக்கான தலை நகர் ‘திருகோணமலை’ என்பதும் அந்த மாநாட்டில் உறுதி செய்யப்பட்டது.
1957  ஜூலை 26 ல் பண்டா செல்வம் ஓப்பந்தம் முதன் முதலாக அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று முக்கியமான அரசியல் ஒப்பந்தத்தில் தமிழ் மக்களுக்கு பன்முக ஆட்சிப் பிராந்திய சபைகள் அமைக்கப்பட்டு, அவற்றிற்கு விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் 1957  அக்டோபர் 04ல் ஜே. ஆர். ஜெயவர்த் தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டித்து நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் தீவிரமாக எதிர்த்தமையாலும் இந்த ஒப்பந்தமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1965 மார்ச் 24 ல் அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும்  தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகத்திற்கும்  ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை யில்  குறிப்பிடப்பட்டவை….
* வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் மொழியாகவும் ஏற்கப்பட்டது.
* வடக்கு – கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்த  உத்தரவாதம் தரப்பட்டது.
* பிரதேச ஆட்சிமுறை மன்றங்கள் தாபிக்கப்பட வேண் டும் என்று ஏற்கப்பட்டது. அவற்றிற்கடங்கலான விடயங் கள் இரு தலைவர்களாலும் பின்னர் நிர்ணயிக்கப்பட விருந்தது.
* காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிப்பங்கீடு சம்பந்தமாகப் பின்வரும் விடயங்கள் முக்கியமாகக் கருத்தில் எடுக்க  உடன்பாடு ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தமும் சிங்களத்தலைவர்களால் நிராகரிக் கப்பட்டது.
1976 அதே 14 ல் வட்டுக்கோட்டையில் தமிழர் விடு தலைகூட்டணி தந்தை செல்வா, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜி ஜி பொன்னம்பலம், இந்திய தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமான் உட்பட அன்றைய தமிழ் கட்சிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழ தனியரசு தீர்மானம் நிறைவேற்றியது.
 அதில் ..
01. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறை யாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.
02.அதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயாட்சி உரிமை வேண்டும்.
03.அதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என தந்தை செல்வநாயகம் தலைமையில் கூடிய இந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானத்தை முன்னிறுத்தி 1977 ஜூலை 21 ல் வடகிழக்கு மக்கள் ஆணை தேர்தல் மூலம் கிடைத்தது.
அதன் பின்னர் 1985 ஜூலை 8-9,ஆகஸ்ட் 12,13 ல் பூட்டான் தலைநகர் திம்புவில் நடந்த பேச்சுவார்தையில்  ஆயுதப்போராட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பில் அன்ரன், திலகர் தமிழர் விடுதலை கூட்டணி சார்பில் : மு. சிவசிதம்பரம், அமிர்தலிங்கம், இரா. சம்பந்தன் ஈ.பி.ஆர்.எல்.எவ்.சார்பில்  அ. வரதராஜப் பெருமாள், எல்.கேதிஸ்வரன், டெலோ சார்பில்: சார்ள்ஸ் அன்ரனி தாஸ், மோகன், ஈரோஸ் சார்பில்.ராஜி சங்கர், ஈ. இரத்தினசபாபதி, புளொட் சார்பில் இரா வாசுதேவா, தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோர் ஒப்பமிட்டு வழங்கிய ஆவணம் திம்பு கோட்பாடு என அழைக்கப்பட்டது.
 அதில்..
* இலங்கைத் தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதை அங்கீகரித்தல்.
* இலங்கையில் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தாயகம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது.
* தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
* வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதற்கு சுயாட்சி வழங்குவதை அங்கீகரித்தல்.
ஆகியவைகளை உள்ளடக்கிய ஆவணம் கையளித்தும் அதனையும் இலங்கை அரசு தட்டிக்கழித்தது..
அதன்பின்னரே 1987 ஜூலை 29ல்  “இந்தியா-இலங்கை ஒப்பந்தம்” இலங்கை ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியால் கைச்சாத்திடப்பட்டு தொடர்ந்து அது அமுல் படுத்தப்படாமல் போனதால்,  அதன் விளைவுகளையும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறோம்.
2001 ஜனவரி 17 ல் பொங்குதமிழ் பிரகடனம் சுயநிர் ணய உரிமை, மரபுவழித் தாயகம்,தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அதன் சுருக்கம்.
2016 செப்டம்பர் 24 ல் எழுக தமிழ் நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி, ரெலோ, ஈபிஆர்எல்எவ்,புளட் மற்றும் வடமாகாண   முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆகியோர் ஒரு ஆவணத்தை வெளியிட்டனர்.
அதில்….
அ) தற்போதைய அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் எமக்கு தந்த படிப்பினையின் அடிப்படையிலும், இலங்கை அரசியலின் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசியல் கலாசாரத்தில் தமிழர்களின் கடந்த 68 ஆண்டு கால கூட்டனுபவத்தின் பிரகாரமும் ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு எந்த வடிவத்திலும் சாத்தியம் இல்லை என நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம்.
ஆ) தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட தீர்வு திட்டத்தின் அடிப்படையில், தேசிய இனப்பிரச்சி னைக்கான நடைமுறை சாத்தியமான தீர்வு, தமிழர் களை இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கில் ஒரு தேசமாக, அவர்களது சுயநிர்ணய உரிமையை மதிக்கும், தன்னளவில் இறைமை கொண்ட சுயாட்சி ஒன்றை நிறுவும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலமாகவே அடையப்படும் எனக் கூறுகின்றோம்.
இ) தமிழர்களின் சுயநிர்ணய உரிமையையும் அதன் வழி தமிழ்த் தேசத்தின் இறைமையையும், நிறுவன ரீதியாக, சமஷ்டி முறைமை ஒன்றின் மூலமாக அடைந்து கொள் ளலாம் என நாம் கூறுகின்றோம்.
ஈ) தமிழர் தேசத்தின் தனித்துவத்தையோ, தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தையோ அங்கீகரிக்காத, உள்ளடக்கத்தில் தெளிவில்லாத அரை குறை தீர்வொன்றை ஏற்றுக் கொள்ள முடியாது என இப்பேரணி கூறுகின்றது.
உ) புதிய அரசியலமைப்பு மிகவும் இரகசியமான முறையில் உருவாக்கப்படுகின்றது. புதிய அரசியலமை ப்பு தொடர்பாக நடாத்தப்பட்ட பொது மக்கள் கலந் தாய்வு தொடர்பிலான அறிக்கை தமிழ் மக்களின் முன் வைப்புக்களை புறந்தள்ளியே சமரப்பிக்கப்பட்டுள் ளது. உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு நகல் தொடர்பிலான மக்கள் வாக்கெடுப்பிற்கு முன்னர் வெளிப்படையானதும், சனநாயக ரீதியில் கலந்துரை யாடல் ஒன்று மக்கள் மத்தியில் இடம் பெற போது மான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அடக்கு முறையின் கீழ் அரசியல் தீர்வு தொடர்பிலான கலந்து ரையாடலை நடாத்த முடியாது. வடக்கு கிழக்கில் கருத்துக் சுதந்திரத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பிலான திறந்த விவாதம் நடைபெற பயங்கரவாதத் தடை சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இராணுவமயநீக்கம் செய்யப்பட வேண்டும் என நாம் கூறுகின்றோம் என குறிப்பிடப்பட்டது. அதுவும் நடக்கவில்லை.
2019 அக்டோபர் 15ல் தமிழரசுக் கட்சி, புளொட், ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் தமது கருத்துக்களை அறிக்கைகளாகச் சமர்ப்பித்திருந்தார்கள். அவையெல்லாம் சேர்க்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத் தும் ஒரு பொது ஆவணமாக தயாரிக்கப்பட்டது. அந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பல விடயங்களை ஏற்றுக்கொண்டது.
சில விடயங்களில் மாத்திரமே கலந்துரையாடப் பட்டது. அதுவே ஆவணமாகவும் தயாரிக்கப்பட்டது. ஆனா லும் புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தொடர்பாக அவர்கள் தொடர்ந்து பேசினார்கள். எனினும் இந்த விடயங்கள் தற்போதைக்குத் தேவையில்லை. நாங்கள் பேசுகின்ற விடயங்கள் வேறு. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறப்பட்டது அத்துடன் இடைக்கால வரைபு தற்போது பேசப்படுவதில்லை, கைவிடப்பட்டுள்ளது என்றெல்லாம் ஏனைய கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.
ஆனாலும் புதிய வரைபை நிராகரிக்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்கள். அப்படி இல்லையேல் இந்த ஆவணத்தில் கையொப்பமிட முடியாது என்றும் கூறிவிட்டு தாமாகவே வெளியேறினார்கள்.
இப்படியாக இணைந்த வடகிழக்கில் நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும், விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்பு இருந்த 2009 மே 18 க்கு முன்னரும் சுனாமி கட்டமைப்பு ஆவணம் தயாரிக்கப்பட்டது அதுவும் இலங்கை அரசு ஏற்கவில்லை.
இப்படியான பல ஆவணங்கள் தமிழ் தலைவர் களால் காலத்துக்காலம் தயாரிக்கப்பட்ட வரலாறுகள் உண்டு எந்த ஆவணங்களையும் இனவாத இலங்கை அரசுகள் கணக்கெடுக்கவில்லை.
இப்போது தமிழரசுகட்சி, சங்கு கூட்டணி தயாரிக்கும் ஆவணங்களால் எதுவும் நடக்காது. மக்களை தேசமாக திரட்டாமல் எதையுமே எந்த தமிழ்த்தேசிய கட்சிகளாலும் சாதிக்கமுடியாது. தேர்தல் கூட்டும், பதவி போட்டியும், கதிரை ஆசைகளால் இயங்கும் தமிழ்தேசிய கட்சிகளால் எந்த பிரயோசனங்களும் ஏற்படாது.