ஈரான் மீது போர்: அனைத்துலகக் கொலையும் கொள்ளையுமாக அமெரிக்க, இசுரேல் வன்கொடு அரசியல் : தோழர் தியாகு

சோவியத்து வீழ்ச்சிக்குப் பின் இந்தப் புவிக்கோளம் அரசியலில் ஒருதுருவ உலகமாகி விட்டதாக புவிசார் அரசியல் விற்பன்னர்கள் அறிவித்துக் கொண்டனர். புவியியலில் மட்டுமன்று, அரசியலிலும் ’ஒருதுருவ உலகம்’ வெற்று மாயைதான்! தொடர்ந்து மாறிவரும் உலகில் அதனால் நிலைத்து நீடிக்க முடியாது என்பதை காலம் வெகுவிரைவில் உணர்த்திற்று. சீனத்தின் பாய்ச்சல் வேக வளர்ச்சி அதனை அமெரிக்காவுக்குப் போட்டியான பொருளியல் வல்லரசாக நிலைநிறுத்தி வருகிறது. இலத்தீன் அமெரிக்க நாடுகளின் தன்னாட்சி வேட்கையும், ஐரோப்பிய வல்லரசுகள் வட அமெரிக்க வல்லரசுக்கு முழுக் கக் கட்டுப்பட மறுப்பதும், பாலத்தீனம் உள்ளிட்ட ஒடுக்குண்ட தேசங்களின் தன்னுரிமைப் போராட்டமும் அமெரிக்காவின் ஒற்றைத்துருவ அரசியலைப் பலதிறப்பட்ட ஆற்றல்களின் பலதுருவ அரசியலால் மாற்றீடு செய்து வருகின்றன.
இந்த மாற்றத்தை அமெரிக்க ஆளும் வகுப்பினால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தச் சகிப்பின்மையின் வெளிப்பாடுதான் தொனால்டு துரும்ப்பின் சண்டியத் தனமான சதிராட்டம்! தொனால்டு துரும்ப் இரண்டாம்
முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது கொடுத்த முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்று:
அமெரிக்காவின் முடிவில்லாத போர்களுக்கு முடிவு காண்பேன் என்பதாகும். உருசியா-உக்ரைன் போருக்கு முடிவு காண்பதாகச் சொல்லி விளாதி மிர் புத்தினுக்கு ஆசை காட்டிப் பார்த்தார். உக்ரைனிய ஜெலன்ஸ்கியின் கையை முறுக்கிப் பார்த்தார். எதுவும் பலிக்கவில்லை.
பாலத்தின மக்களை இனவழிப்புச் செய்யும் இசுரேலின் காசா போருக்கு முழுமையாக முட்டுக் கொடுத்துத்தான் துரும்ப் அந்தப் போருக்கு முடிவு கட்டினார். பாலத்தின இனவழிப்புக்கு மட்டுமல்லாமல், சீனத்தையும் உருசியாவையும் கட்டுப்படுத்தி வைக்கவும் கூட ஈரானை வீழ்த்த வேண்டும் என்பது அமெரிக்க வல்லரசின் கணக்கு. ஈரானை வீழ்த்துவது சயோனிச இசுரேலின் விரிவாதிக்க நலனுக்கும், அமெரிக்க வல்லரசின் எரிபொருள்சார் வணிக நலனுக்கும் தேவைப்படுகிறது.
பிப்ரவரி 28ஆம் நாள் அமெரிக்காவும் இசுரேலும் ஈரான் மீது முழுவீச்சில் போர் தொடுத்து ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியைப் படுகொலை செய்தன. ஈரான் மீது போர் தொடுப்பதற்கு துரும்ப்பும் நெதன்யாகுவும் சொல்லக் கூடிய காரணங்கள்:
1) ஈரான் அணுவாய்தம் செய்யக் கூடிய நிலையில் உள்ளது;
2) நடுக்கிழக்கு வட்டாரத்தில் திகிலிய (பயங்கரவாத) அமைப்புகளுக்குத் துணை செய்கிறது;
3) ஈரானிய அரசு அந்நாட்டு மக்களை அடிமைகளாக ஒடுக்கி வைத்திருப்பதால், அங்கு ஆட்சி மாற்றம் தேவைப்படுகிறது.
இந்தக் காரணங்கள் எல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் இறைமை கொண்ட ஒரு நாட்டின் மீது இரு அயல் அரசுகள் இவ்வாறு போர் தொடுப்பதற்குப் பன்னாட்டுச் சட்ட முறையில் இடமில்லை.
முதலாவதாக, உலகில் மிகப் பெரிய அளவில் அணுவாய்தங்களைக் குவித்து வைத்திருப்பது அமெரிக்க வல்லரசுதான். அமெரிக்க உதவி தவிர இசுரேலும் தன் னளவிலேயே அணுவாய்தங்கள் வைத்திருப்பது மறுக்கப் படவில்லை. ஆறு மாதம் முன்புதான் ஈரானின் அணுக்கரு ஆராய்ச்சித் திட்டத்தைக் குண்டு போட்டு அழித்து விட்டதாக துரும்ப்பின் ஆட்சி சொல்லிக் கொண்டது.
இரண்டாவதாக, லெபனானின் ஹிஸ்பொல்லா, யேமனின் ஹூதி, காசாவின் ஹாமாஸ் போன்ற அமைப்புகள் இசுரேலிய விரிவாதிக்கத்துக்கும் அமெரிக்க வேட்டைக்கும் தடையாக இருப்பதால் அவை பயங்கரவாத அமைப்புகளாகப் படம்பிடித்துக் காட்டப்படுகின்றன. அரச பயங்கரவாதத்தின் முழு உருவாகத் திகழும் இசுரேலிய சயோனிச அரசைத் தன் அடியாளாக வைத்துக் கொண்டுதான் அமெரிக்கா ஈரானின் பயங்கரவாதம் பற்றிப் பேசுகிறது.
மூன்றாவதாக, ஈரானில் ஆட்சி மாற்றம் என்பது முழுக்க முழுக்க ஈரானிய மக்களின் உரிமை ஆகுமே தவிர அமெரிக்காவோ இசுரேலோ போர் தொடுத்துப் படுகொலைகள் செய்து திணிக்கக் கூடிய ஒன்றன்று. ஈரானில் நடைபெற்று வந்த முகமது மொசாடெக்கின் சனநாயக ஆட்சியை 1953 திசம்பரில் கவிழ்த்து விட்டு மன்னராட்சியைக் கொலுவேற்றியதே அமெரிக்க சிஐஏ உளவு நிறுவனம்தான். இன்றளவும் ஈரானில் தனக்குத் தலையாட்டும் மன்னராட்சியை மீட்பதுதான் துரும்ப்பின் திட்டம்.
இசுரேல் தன் தேவைக்காக அமெரிக்காவை இந்தப் போரில் இழுத்து விட்டிருப்பதாக ஒரு கட்டத்தில் அமெரிக்க அயலுறவு அமைச்சரே சொல்லியிருப்பதை அமெரிக்க செனட் விவாதத்தில் சில உறுப்பினர்கள் எடுத்துக் காட்டினார்கள். ஈரான் தாக்கப் போவது தெரிந்து அதை முன்கூட்டியே தடுப்பதற்காகவே இந்தத் திடீர்ப் போர் என்ற இசுரேலியக் கதையை இசுரேலிலேயே யாரும் நம்ப வில்லை.
ஈரான் இந்தப் போரில் தன் உச்சத் தலைவரையும், 13 மாதப் பேரக் குழந்தை உட்பட அவர் குடும்பத்தைச் சேர்ந்த சிலரையும், ஆட்சியில் முக்கியமான மேலும் சிலரையும் பறிகொடுத்துள்ளது. தெஹ்ரானில் 165க்கு மேற்பட்ட பள்ளிச் சிறுமியர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். செஞ் சோலைப் படுகொலை நம் நினைவுக்கு வருகிறது.
ஈரான் இசுரேல் மீதும், பாரசிக வளைகுடாவிலும் யோர்தானிலும் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீதும் எறிகணைத் தாக்குதல் நடத்தி வருகிறது. உலகப் பொருளி யலுக்கு உயிர்நாடியான ஹொர்முஸ் நீரிணையை மூடுவ தாக அறிவித்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற எண் ணெய் இறக்குமதி நாடுகள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதில் ஐயமில்லை.
ஈரானை வம்புக்கிழுத்து ஒழித்துக் கட்டும் அமெரிக்க, இசுரேலியக் கெடுமுயற்சி புதிதன்று. 2018இலும் 2025இலும் இப்படித்தான் நடந்தது. இந்த இரு நிகழ்வுகளிலும் போரைத் தூண்டியவர்கள் இதே துரும்ப்பும் இதே நெதன்யாகுவும்தான். இந்த முறை அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமுக முடிவை நெருங்கிக் கொண்டிருந்த போதுதான் இந்த இரட்டைப் பேய்கள் அவசரமாகப் போர் தொடுத்தன.
ஈரான் அணுகுண்டு செய்வதில்லை என்றும், அணுவாய்த மூலப்பொருள் குவிப்பதில்லை என்றும் உறுதியளித்திருப்பதால் உடன்பாடு நெருங்கி விட்டதாக ஓமன் நாட்டின் அயலுறவு அமைச்சர் பாதர் அல்-புசைதி பிப்ரவரி 27ஆம் நாள் கூறினார். அடுத்த நாளே இரவோடு இரவாகக் கொடுந்தாக்கு நிகழ்ந்து விட்டது.
ஈரான் மக்களின் உரிமைகள், விடுமைகள் பற்றி யெல்லாம் கவலைப்படுவதாகச் சொல்லும் துரும்ப் வகையறா தாங்கிப் பிடித்துள்ள அரபு முடியரசுகளின் வல்லாட்சியம் பற்றிச் சொல்லவே தேவையில்லை. சவுதி அரேபியாவிலும் யோர்தானிலும் குடியாட்சியம்தான் வாழ்கிறதா? உண்மையில் துனிசியா, எகிப்து என்று பற்றிப் பரவிக் கொண்டிருந்த அரபு வசந்தத்தின் குடியாட்சிய அலையை வழிமறித்துக் குருதிச் சேற்றில் அமிழ்த்தியதே அமெரிக்க வல்லரசுதான்.
பன்னாட்டுச் சட்டங்களையோ ஐநா வடிவிலான உலக ஒழுங்கையோ எள்முனையளவும் மதிக்காத கொடுங்கோலர்கள் அமெரிக்க துரும்ப்பும் இசுரேலிய நெதன்யாகுவும். ஓராண்டுக் காலத்தில் ஏழு நாடுகள் மீது குண்டு வீசியிருப்பவர் துரும்ப்பு. பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தால் போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பவர் நெதன்யாகு. காசாவிலும் லெபனானிலும் தெஹ்ரானிலும் குழந்தைகளின் குருதியில் கைநனைத்திருக்கும் கொலைகார இரட்டையர்கள் இவர்கள். இட்லரும் முசோலினியும் போல் முடிந்து போக எல்லாத் தகுதியும் கொண்டவர்கள்.
துரும்ப்பும் நெதன்யாகுவும் அதிகார வெறி கொண்டு இன்று நடுக்கிழக்கு வட்டாரத்தையே போரில் தள்ளி விட்டுள்ளனர். உடனே இவர்களின் கைகள் கட்டப்படவில்லை என்றால் உலகையே பேரழிவுப் போருக்குள் தள்ளி விட்டு விடுவார்கள். அதற்கு முன் இவர்கள் இந்தப் போரில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, அவரவர் நாட்டிலும் அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுக் கூண்டிலேற்றப்பட வேண்டும். வரலாற்றின் சுவரில் அப்படித்தான் எழுதப்பட்டுள்ளது.
இறுதியாக, ஈரான் மீதான அமெரிக்க-இசுரேலியப் போர் நமக்குத் தொலைவுச் செய்தி எனக் கருத வேண்டாம். இசுரேல், அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று அரசுகளோடும் சேர்ந்து ”ஐ2 யு2” உடன்படிக்கையில் இந்திய அரசு ஒப்பமிட்டுள்ளது என்பதால் இந்தப் போர்ப் பாவத்தில் நமக்கும் பங்குள்ளது. யூத சயோனிச நெதன்யாகுவோடு இந்து தேசிய நரேந்திர மோதிக்குள்ள நெருக்கம் போர் தொடங்குவதற்கு முந்தைய நாள் கூட டெல் அவிவில் காட்சிப்படுத்தப்பட்டது. இசுரேல் தந்தை நாடாம்! இந்தியா தாய்நாடாம்! எதற்கு? இசுலாமியருக்கு எதிரான வெறுப்புக்கும் கொலைவெறிக்கும்! போருக்கு நடுவே இந்தியாவிற்கு விருந்தாளியாக வந்த ஈரானியப் போர்க்கப்பல் இந்திய, இலங்கைக் கடல் அருகிலேயே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் மூழ்கடிக்கப்பட்டிருப்பது போர் விரைந்து பரவி வருவதான் அறிகுறியே ஆகும்.
வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்ப தென்றால், மன்றோ கொள்கை அறிவிக்கப்பெற்று இருநூறு ஆண்டுகளுக்கு மேலாயிற்று. அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த ஜேம்ஸ் மன்றோ 1823 திசம்பர் 2ஆம் நாள் இந்தக் கொள்கையைப் பறைசாற்றினார். மேற்கு அரைக்கோளம் (அமெரிக்கக் கண்டம்) முழுவதும்  அமெரிக்க ஐக்கிய நாடுகளின் (அமெரிக்க வல்லரசின்) செல்வாக்குக்கு உட்பட்டது என்ற இந்த அடிப்படையில்தான் எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லாமல் வெனிசுலாவின் மதுரோவையும் அவர் மனைவியையும் பிடித்துக் கொண்டுபோய் சிறையிலடைத்து விட்டு அந்நாட்டின் எண்ணெய் வளத்தை அப்படியே எடுத்துக் கொண்டார் தொனால்டு. இந்தச் செயல் கடற்கொள்ளையை விடவும் மோசமானது.
மன்றோ கொள்கை இன்று தொனால்டு துரும்ப் பினால் உறுதி செய்யப்பட்டு விரிவாக்கப்பட்டுள்ளது. இதை இன்று ’தொன்றோ கொள்கை’ எனலாம். இந்தக் கொள்கையின் மேற்கு அரைக்கோளம் மட்டுமல்ல, புவிக் கோளம் முழுவதுமே அமெரிக்க வல்லரசின் செல்வாக்கு மண்டலமாகக் கருதப்படுகிறது. துரும்ப்பின் ஆட்சியில் முழு உலகுமே வாசிங்டனின் கொல்லைப்புறமாக மதிக்கப் படுகிறது. கனடா, கிரீன்லாந்து, ஸ்பெயின் தொடங்கி பாலத்தீனம், ஈரான் வரை அமெரிக்க வல்லாதிக்கத்தின் கொலையும் கொள்ளையுமான கை கேட்பாரின்றி நீள்கிறது. ஒருதுருவ உலகம் என்ற கனவின் முதல் முக்கியப்படிதான் ஒருதுருவ மேற்காசியா அல்லது ஒருதுருவ நடுக் கிழக்கு. இந்த அமெரிக்க-இசுரேல் கனவைக் கலைப்பது போட்டி வல்லரசுகளின் கடன் மட்டுமன்று, அவற்றை விடவும் அரசுகளற்ற தேசங்களின் கடன்!