ஈரான் – இஸ்ரேல் இடையேயான பதற்றத்தை அடுத்து இலங்கையின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்ததை அடுத்து இலங்கை முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதன்படி அனைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கையில் உள்ள இஸ்ரேலிய நாட்டினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் கணிசமான எண்ணிக்கையில் தற்போது இலங்கையில் தங்கியுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 18 வரை இஸ்ரேலில் இருந்து 10 ஆயிரத்து 899 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
அதேநேரத்தில், ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஈரானில் இருந்து 5 ஆயிரத்து 782 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.