இஸ்லாமியர்களின் திருமணச் சட்டம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்து தமக்கு வருத்தமளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நலீம் தெரிவித்துள்ளார்.
‘பெண்கள் தொடர்பிலும் விவாகம், விவகாரத்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் தெளிவாக சட்டங்கள் வகுக்கப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (10) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘தமது சமூகத்தினரின் விடயத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதை விடுத்து தேச வழமை சட்டத்தில் உள்ள பிரச்சினைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்குமாறும்’ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நலீம் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் புகழைத் தேடுவதற்காக இராமநாதன் அர்ச்சுனா இஸ்லாமிய சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நலீம் சாடியிருந்தார். இதேவேளை, ‘ஒரு சமூகத்தின் உணர்வுகளை தூண்டும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது’ என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
‘இஸ்லாமிய திருமணச் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ‘ஒரு சமூகத்தின் உணர்வுகளை தூண்டும் வகையில் திருமணச் சட்டம் தொடர்பில் கருத்துரைக்கும் இவ்வாறான செயற்பாடுகள் இனங்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்தும்’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா குறிப்பிட்டிருந்தார்.
‘பாராளுமன்ற உறுப்பினர் என்ற உரிமையைப் பயன்படுத்தி ஒரு மார்க்கத்திற்கு எதிராகக் கீழ்த்தரமாகப் பேசுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்களுக்கு இன்று (10) பாராளுமன்றில் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொதுவாக மக்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளையே தாம் பாராளுமன்றில் முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
‘இஸ்லாமிய மதத்தில் மாற்றங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கவில்லை’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘சிறுபிள்ளைகளையும், பெண்களையும் மாத்திரமே தாம் கருத்திற் கொண்டு இஸ்லாமிய திருமணச் சட்டம் தொடர்பில் பேசியதாகவும் அவர் கூறினார். ‘எந்த மதத்தையும் நிந்திக்கும் விதத்தில் தாம் செயற்படவில்லை’ என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.



