இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கை இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அங்குள்ள பணியாளர்கள் விழிப்புடன் இருப்பதற்கும் அவர்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்று ஏற்படாக தூதரகம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு சேவைகள் தொடரும் என்றும் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இதேவேளை, இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார எச்சரித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஈரானால் இஸ்ரேல் மீது அதிகளவான தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருக்கலாம் என்ற அடிப்படையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் எனவும் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.